பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ள வழக்குகள்‌

245

விலங்கை விட்டுத் தொழுவத்தில் மாட்டிக்கொண்டதுபோல், நான் மத யானைக்குத் தப்பிப் பிழைத்து, இந்தக் கொடியர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்டு பட்ட பாடுகள் ஜன்ம ஜன்மத்துக்குப் போதும். என்னுடைய கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நான் பல ஆபரணங்களைத் தரித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆபரணங்களை இச்சித்தே அவர்கள் என்னை அநியாயஞ் செய்ததாக எனக்கு ஸ்பஷ்டமாய் விளங்கிற்று. அந்த அநியாயக்காரர்களுக்கு நகைகளைக் கொடுத்துத் தயவு சம்பாதிப்பதைப் பார்க்கிலும் நியாயாதிபதிகள் செய்யுந் தீர்மானத்துக்கு உட்படுவது நலமென்று நினைத்து நியாயசபைக்குப் போனேன். நாங்கள் போவதற்கு முந்தி, நியாயசபை கலைந்துபோய்விட்டதால் அன்றைக்கு விசாரணை நடக்கவில்லை. அந்தத் துஷ்டர்கள் என்னைக் காவல் கிடங்கில் ஒப்புவிப்பதற்காகக் கொண்டு போனார்கள். என்னுடைய நகைகளை நானே ஸ்வேச்சையாய்க் கொடுத்து விடுவேனென்று அவர்கள் எதிர்பார்த்தும் நான் கொடுக்கவில்லை. அவர்களும் விடாத கண்டர்கள்; நானுங் கொடாத கண்டனாதலால் அவர்கள் என்னை வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். எப்படியென்றால் மாலைக்காலம் வந்து இருட்டிய உடனே அவர்களுள் ஒருவன் என் பின்னே வந்து என் கண்களைப் பொத்திக்கொண்டான். இருவர் என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் என்மேலிருந்த ஆபரணங்களைக் கழற்றி ஆளுக்கொரு ஆபரணமாகத் தரித்துக்கொண்டார்கள். உடனே நான் “கூ! கூ! கொள்ளை யடிக்கிறார்கள்” என்று கூவினேன். அந்தச் சப்தங் கேட்டுக் காவற்சேவகர்கள் வந்து வளைத்துக்கொண்டு நடந்த சங்கதியை விசாரித்தார்கள். நான் “என்னுடைய ஆபரணங்களை அந்தப் படுபாவிகள் கழற்றிக் கொண்டார்கள்” என்று முறையிட்டேன். அவர்கள் என் சொல்லை மறுத்து “அந்த ஆபரணங்கள் தங்களுக்குச் சொந்தம்” என்று சாதித்-