பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரச பதவியின்‌ மேன்மை

281

கொடுத்து ஆதரிக்க வேண்டும். அவர்கள் அகால மரணமாய் இறந்து போய், அவர்களுடைய புத்திர களத்திராதிகள் அன்ன வஸ்திரத்துக்கு வழியில்லாமல் நிர்க்கதியாயிருப்பார்களானால், அவர்களை அரசன் போஷிக்கவேண்டும். தங்களுக்குப் பிற்காலந் தங்களுடைய குடும்ப சம்ரக்ஷணைக்கு மார்க்கஞ் செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடன் அனேகர் லஞ்சத்தைக் கையாளுகிறபடியால், அரசன் தங்களுக்குப் பிற்காலத்தில் தங்களுடைய குடும்பங்களைப் போஷிப்பானென்கிற நிச்சயமிருந்தால் அநேகர் லஞ்சம் வாங்காமற் பரிசுத்தராயிருப்பார்களென்பது உண்மையே.

இராஜ பதவி எல்லாருடைய அந்தஸ்துக்கும் மேற்பட்டதாயிருப்பது போலவே, அரசன் நற்குணங்களிலும் புத்தியிலும் சாமர்த்தியங்களிலும் மற்றவர்களுக்கு மீசரமாயிருக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் அவனை யார் மதிப்பார்கள்? சூரியன் தன்னுடைய ஒளியினால் எல்லாப் பொருள்களையும் பிரகாசிக்கச் செய்வதுபோல், அரசனுந் தன்னுடைய நற்குணங்களாற் குடிகளுடைய குணந் திருந்தும்படி செய்யவேண்டும். அரசன் சிற்றின்பத்தைத் திரஸ்கரிக்க வேண்டும். அன்னிய ஸ்திரீகளுடைய அழகுக்குக் குருடனாயிருக்க வேண்டும். தப்பு ஸ்தோத்திரத்துக்குச் செவிடனாயிருக்க வேண்டும். அரசனுக்குச் செங்கோலின் பலம் பலமேயல்லாமல் ரத கஜ துரக பதாதிகள் பலமல்ல. செங்கோல் கோணாமல் அரசாளுகிற மன்னனுக்கு நாடெல்லாம் அரணானதல் வேறு அரண் வேண்டுவதில்லை. குடிகளெல்லாம் அவனுக்குப் படையாகையால், வேறு படை வேண்டுவதில்லை. அவர்களுடைய மனங்களெல்லாம் அவனுக்கு வாசஸ்தலமானதால் வேறு அரண்மனை வேண்டுவதில்லை. அந்த அரசனுக்குச் சத்துருக்களுமில்லை. கொடுங்கோல் மன்னனுக்குக் குடிகளே பகைவர். அவனுடைய கோட்டையே யுத்த பூமி.