பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

கிறேன்." என்றார். பிறகு கனகசபையைச் சிறு பிள்ளை முதல் வளர்த்தவர் எங்கே என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு அவரை நோக்கி "ஐயா! உம்மைப் போல நல்லவர்கள் உண்டா? நாங்கள் பிள்ளையைப் பெற்ற கடமையே அல்லாமல், அவனுக்கு ஒரு நன்மையுஞ் செய்ததில்லை. நீர் எவ்வளவோ பாடுபட்டு அவனை அருமை பெருமையாக வளர்த்து அவனை மனுஷனாக்கி விட்டீரே! என் கூடப் பிறந்த தம்பி என் பிள்ளையைக் கொலை செய்ய நினைத்தானே! ஒரு சம்பந்தமும் இல்லாத நீர் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகப் பிள்ளையை வளர்த்தீரே! உமக்கு இந்த உலகம் முழுமையும் கொடுத்தாலும், நீர் செய்த உபகாரத்துக்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனம் ஆகுமா?" என்று சொல்லி, பிறகு என் தாயார் தகப்பனார் பந்துக்கள் முதலிய ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித்தனியே ஸ்தோத்திரஞ் செய்யத் தொடங்கினார். அவர் செய்கிறதைப் பார்த்தால் உலக முடிகிறவரையில் உபசாரத்தை நிறுத்தமாட்டாரென்று தோன்றிற்று. என் தகப்பனாரும் ஞானாம்பாள் தகப்பனாரும் எழுந்து "போஜனத்துக்கு நேரமாகிறதே, கிருபை செய்ய வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். அவரும் அவருடைய பத்தினியாரும் "எங்களால் எல்லாரும் பசியாயிருக்கிறீர்களே" என்று சொல்லி உடனே எழுந்து ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு ஒரே பந்தியாய் இஷ்டான்ன போஜனஞ் செய்தோம். மறு நாள் முதல் எங்கள் கிருகத்தில் அவர்களை வரவழைத்து வைத்துக் கொண்டு, பத்து நாள் வரையில் அவர்களுக்கு சோடசோபசாரங்களும் செய்தோம். துரும்பு போல் இளைத்திருந்த கனக சபை, தாய் தகப்பனைக் கண்ட சந்தோஷத்தினால் பாரித்துப் பூரித்து அவர்களுடன் வந்த யானைகளின் ஒன்று போல் ஆனான்.