பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமியப்பன்‌ சூழ்ச்சி

55

களைக் கற்பலங்காரி வீட்டுகுக் கொண்டுபோய்த் திறந்துகாட்டி, அவளுடைய புத்தியை மயக்கப் பிரயாசப்பட்டார்கள். அவள் அவர்களைப் பார்த்து "ஸ்திரீகளுக்குக் கற்பே சிறந்த ஆபரணம்; அந்த ஆபரணம் போய்விட்டால், இந்த ஆபரணங்களினால் வரும் பிரயோசனம் என்ன?" என்று சொல்லி, அந்த ஆபரனங்களை உதைத்துத் தள்ளி, அவர்களைத் தூஷித்துத் துரத்திவிட்டாள். அவர்கள் போய் சற்று நேரத்துக்குப் பின்பு வீட்டுக்கு வந்த தன் பர்த்தாவிடத்தில் சகல சங்கதிகளையும் தெரிவித்து "இந்த அரசனிடத்தில் உத்தியோகஞ் செய்வது முறையல்ல; உத்தியோகத்தை விட்டுவிட்டுப் பிச்சையெடுத்தாயினும் பிழைப்பது உத்தமம்" என்றாள். அவளுடைய வார்த்தையைப் புருஷன் அங்கீகரித்துக் கொண்டு உத்தியோகம் வேண்டாமென்று ஒரு பத்திரிகை அனுப்பிவிட்டு, அவரும் அவருடைய பத்தினியும் ஊரைவிட்டுப் புறப்பட்டு அடுத்த கிராமத்துக்குப் போய், ஒருவருக்குந் தெரியாமல் அந்தரங்கமாக வசித்தார்கள். உத்தியோக வரும்படியைத் தவிர வேறே சீவனத்துக்கு மார்க்கம் இல்லாதபடியால், உத்தியோகம் போன பிற்பாடு அவர்கள் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது. அவர்களுடைய நகைகள், பாத்திர சாமான்கள் முதலியவைகளை விற்றுச் சில நாள் காலக்ஷேபஞ் செய்தார்கள். பிற்பாடு, கையில் காசும் இல்லாமல், கடன் கொடுப்பாருமில்லாமல் கைப்பாடுபடவுந் தெரியாமல், இராப்பட்டினி பகற்பட்டினியாயிருக்க ஆரம்பித்தார்கள். அந்த அரசனுக்கு அவர்கள் போயிருக்கிற இடம் சில நாள் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்தது. சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு உபாயங்களைச் செய்துவிட்டோம். இனி மேல் நாலாவது உபயோகமாகிய தண்டத்தை உபயோகிப்பதே காரியமென்று அவன் நிச்சயித்து, தானாயிறந்துபோன ஒரு அநாதைப் பிரேதத்தை, நடுச் சாமத்தில் அவர்கள் இருக்கிற வீட்டிற் போட்டுவிடும்படியாயும், மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக்