உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

புதியதோர் உலகு செய்வோம்

மகளின் நோக்கிலோ, தாய் இவருக்காக உடலாலும் பொருளாலும் கடமைப்பட்டிருப்பதாக நினைக்கும் வண்ணம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தாய் உடல் நலமில்லாமல் சாகும் மூச்சை விட்டுக் கொண்டிருந்தாலும் , கணவன் போகக்கூடாது என்று சொன்னால் அந்த வாக்கைக் கடைப்பிடிப்பதுதான் அவளுக்கு மேன்மை. உத்தமமான தாயன்பும் எவ்வாறு மகள் விஷயத்தில் பிரித்து நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது! கணவனின் தாயாதி பங்காளி இறந்தால்கூட இவள் பத்துநாள்-கருமாதிச் சோகச் சடங்குகளைக் கொண்டாட உரிமையுள்ளவள். ஆனால் சொந்தத் தாய்க்கு மூன்றே நாட்கள்தாம் துட்டி நாட்கள்.

தாயின் இடத்தில் சிற்றன்னை என்று வந்து விட்டாலோ, நிச்சயமாக அவள் ஒரு கொடியவளாகவே நெறிப்படுத்தப்படுகிறாள். மறுதாரம் எத்துணை அன்புடனும் ஆதரவுடனும் முதல் தார மக்களைப் பேணினாலும், சுற்றியுள்ள பெண்களே அவளைச் சந்தேகக் கண்கொண்டுதான் துருவுவார்கள். அந்த மக்களிடையே அவள் காட்டாத வேற்றுமையை சாடைமாடையாக ஏற்றி நஞ்சை ஊட்டுவார்கள். இதனாலெல்லாம் அந்தப் பெண்களுக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா? கிடையாது. பெண்கள் தங்கள் குடும்ப - சமூக உறவுகளை ஒருவருக்கொருவர் குதறிக் கொள்வது இயல்புக்குரியதாக நிலைப்படுத்தப்பட்டு, காலம் காலமாக, இதிகாச, புராண ரீதியாக வலுவிக்கப் பெற்று, பின்பற்றப்படுகிறது.

சகோதரி - சகோதரி உறவுகளில், போட்டியும் பொறாமையுமே முதன்மை பெறுகின்றன. இந்தப் போட்டியில், அறிவு மற்றும் திறமைகளுக்கிடமில்லை. அழகு - ஆபரணங்கள் உடைமை, கணவர் பெருமை,