உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

புதியதோர் உலகு செய்வோம்

இடைநிலை, மேல்தட்டுக் குடும்பங்களில் மகனோ, மகளோ சிறகு முளைத்துப் பறந்து சென்றபின், குடும்பத்தலைவி, தலைவர்களுக்கு இந்தத் தொடர்கள் பொழுது போக்காக இருக்கலாம். அவர்கள் வாழ்ந்து ஓய்ந்த காலத்தில் இந்தத் தொடர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமில்லை. ஆனால், வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆதாரங்களான உணவு, உறையுள், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றுக்கும் கழிப்பறை வசதி போன்ற மானம் காக்கும் தேவைகளுக்குமே அலைபாயும் அடித்தட்டு, குடிசை வாழ் பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை இந்த டிவி பூதம் மிச்ச சொச்சம் வைக்காமல் விழுங்கிக் கொண்டிருக்கிறதென்றால் மிகையில்லை.

இவர்களின் சிறார்களுக்கு அளிக்கும் இலவசக் கல்வியில், பேருந்துப் பயண அட்டையும், ஒரு நேர இலவசச் சோறும்தான் உருப்படியானவை. எனவே பன்னிரண்டு வயதைத் தாண்டுமுன் பள்ளி உதிர்த்த பிஞ்சுகளாக மாற, பருவம் எய்தும் நேரமே போதுமானதாக இருக்கிறது. தாமரை இலைகள் போன்ற பள்ளித்தலங்களில் தங்கிய நேரத்தில் எந்த எழுத்தறிவும், இவர்களுக்கு ஒட்டியிருக்காது. பருவமெய்தியதும் அதை விளம்பரப்படுத்தும் மஞ்சள் நீர் மரபாசாரங்களில், செலவு கடன் - மொய் என்ற வணிக லாபக்கணக்கில் குடிசைச் சமுதாயம் மகிழ்கின்றது. பூப்படைந்த பெண் பெற்றோருக்கு பாரம். அவளை வீட்டில் விட்டுவிட்டுப் பெற்றோர் வேலைக்குச் செல்ல முடியாது. இவளை வேலைக்கு அனுப்பும் இடங்களிலோ, கீசகர்களும், கவந்தர்களும் தருணம் பார்த்துக் குதறி- விடுவார்கள். எனவே எவன் வந்து முதலில் கேட்கிறானோ அல்லது தொட்டு விடுகிறானோ அவனுக்கு இருப்பதை இல்லாதவற்றை விற்று, வாழ்க்கையையே அடகுவைத்து வரதட்சிணை, மினுக்குச் சேலை, நகை, விருந்துச் சாப்பாடு