உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

79

வந்திருந்த பெண்கள் தங்கிய விடுதியில் இருந்தேன். விடுதி வாயிலில் ஓர் அடி பம்பு இருந்தது. அது ஒய்வு ஒழிவு இல்லாமல் ஆஸ்துமாக்காரரின் இதயம் போல் சிரமப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. முக்கடலும் சங்கமிக்கும் நீர்ப்பிரளயம் இருந்தும் பயனில்லை. பெண்கள் இடைவிடாமல் இயக்கிக் கொண்டிருந்தார்கள். அன்றிரவு முழுவதும் எனக்கு உறக்கம் வரவில்லை. முக்கடலின் அலையோசையினால் அல்ல; மாநாட்டில் வீட்டுக் கடமை மறந்து பங்கு பெறவந்திருந்த பெண்களின் பேச்சொலியோ, குறட்டையொலியோ, குழந்தைகளின் அழுகையொலியோ காரணமில்லை. மரணாவஸ்தையில் போராடும் பம்பு அடியோசையும் கூடக் காரணமில்லை. அந்தத் தண்ணீர்ப் போராட்டத்தில் ஒர் ஆண் குஞ்சுகூடப் பங்கு பெற வரவில்லை. அடுத்தநாள் பேச்சில் இதைக் குறிப்பிட்டேன்.

ஆத்திரத்துடன் பேசினேன். மார்ச் 8 மகளிர் தினங்கள் எத்தனையோ வந்து போகின்றன. கிளாரா ஜெட்கின் அம்மை, உலக மகளிரெல்லாம் உழைப்பு மதிப்பையும் மனித உரிமையையும் பெற வேண்டுமென்று அந்த நாளை ஒதுக்கி, ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாகின்றன. நம் தாய் நாட்டில் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பு, இல்லத்தை ஆளவந்திருக்கும் மகராசியின் தலையில்தான் கிரீடமாக வைக்கப்பட்டிருக்கிறது. நீலகிரிப் பழங்குடி மக்கள் திருமணங்களில் முன்பு மணமகள் அருவிக்குச் சென்று குடத்தில் நீரெடுத்து வருவதோடு சடங்கு நிறைவேறும். கோவையைச் சார்ந்த கிராமங்களில் கூட மணமகள் சீர்த் தண்ணீர் கொண்டுவரும் சடங்கு உண்டு. கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு வருவாள். இந்த மரபுகள் இன்றும் கட்டாயமாகப் பெண்களின் கடமையாகவே விடிந்திருக்கிறது.