பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

83

பெண் உள்ளே புகுந்து மறுபுறம் வரலாமா என்று கண்ணோட்டமிடுகையில் எதிர்பாராதது நிகழ்கிறது. எதிர்ப்புறப்பொந்து வாயிலில் நின்ற ஒரு மூன்று வயதுப் பிஞ்சின் கையில் இருந்த மிட்டாய் வழுக்கி எட்டி நின்ற ஏதோ ஒரு சக்கரத்தடிக்குப் போகிறது. பிஞ்சு இடுக்குகளில் புகுந்து, கையால் துழாவுகையில் ஏக உறுமல்களுடன் தடைப்பட்ட சுவாசங்கள் அசைந்து நகர, “யம்மா, யம்மா, புள்ள புள்ள!” என்று கூக்குரல்களில் குடத்தோடு இடையே புகுந்த பெண்ணின் குடம் சரிந்து நீர் அனைத்தும் புழுதியைக் குளிப்பாட்ட, ஒரே கூச்சல். ஒரு காக்கிச் சட்டைப் போலீசு, பிஞ்சுக் குழந்தையை அலக்காக மீட்க, இரத்தக்களேவரம். கேசு எல்லாம் தடுக்கப்பட, சுபம், சுபம்

ஆனால், போலீசுக்கு வந்த வேட்டை போயிற்றே?

“என்னம்மா நீ? புள்ளய அங்கிட்டிருந்து கூப்புடுற? இப்ப நா எடுக்கலன்னா இன்னாவுது? நசுங்கிச் செத்திருக்குமே?” இவளோ, குடத்து நீர் சரிந்த இழப்பில் கப்பல் கவிழ்ந்த பிரலாபத்தைத் தொடங்குகிறாள்.

“சரி, சரி, புள்ளய பத்திரமாகக் குடுத்திட்டேன். எதுனாச்சும் குடுத்தனுப்பு. இந்நேரம் சட்டினியாயிருக்கும் அது.”

புள்ளையோ மிட்டாயை இழந்த துக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுகிறது.

தாயார்க்காரி, அதன் முதுகில் இன்னும் நாலு சாத்துகிறாள். “யோவ் நீயாரய்யா புள்ளயக் காப்பாத்துறது? இது பொட்டக் கயித. எவனையாயினும் இட்டுகினு போகும். அவ குடிச்சிட்டு வந்து ஒதிப்பா. இது செத்திருந்தா ஒயிஞ்சிதின்னிருப்பே. எதாலும் கேசு போட்டு காசு வாங்கலாம். உன்ன யாரு இங்க வரச்சொன்னது! அங்க