உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

புதியதோர் உலகு செய்வோம்

வசதிகளையும் முன்னிறுத்தி, முதல் பேற்றையே தள்ளிப்போட கருக்கலைப்பு இந்நாட்களில் அசாதாரணமன்று. மக்கள் பெருக்கக் கட்டுப்பாடு இன்றியமையாத ஒன்றுதான். ஆனால், அது முதல் பலியாக வாங்கியவை தாய்மைக்குரிய அகப்பண்புகள்தாம். திட்டமிட்டு ஒன்றோ, இரண்டோ பெற்றாலும், பாலூட்டிச் சீராட்டி வளர்க்க நேரம் எங்கே? பிள்ளைகளோ காப்பகக் கூண்டுகளிலும் பின் மழலைப் பள்ளிகளிலும் தாயின் நெருக்கமான உயிர்சூட்டைக் கனவு காண்கிறார்கள். தாய்மொழி பழகாத சூழலில் அன்னியப்படும் ‘பிஞ்சு, மம்மி எனக்கு ஒருநாள் லஞ்சு எடுத்திட்டு வரியா?’ என்று கேட்டுத் தாயை வேதனைப்படுத்தும். இந்த வளர்ப்பில், பொறுப்பை அநேகமாக ‘பிதா’ கண்டு கொள்வதே இல்லை.

அநேகமாக மழலைப் பள்ளிகளில் ஆசிரியைகளே கற்பிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள், பிள்ளைகளின் உள்ளங்களில் எத்தகைய பண்புகளை - பண்புகள் சார்ந்த பிம்பங்களைப் பதிக்கின்றனர்? சலுகைகள், ஒருபக்க நீதிகள் எல்லாம் பிள்ளைகளுக்குள் போட்டி, பொறாமை உணர்வுகளை உசுப்பிவிடுவதும் நடப்பியல் உண்மைகள். இந்த ‘மிஸ்’கள் நூற்றுக்கு நூறு ஆசிரியைகளா? இருக்க முடியாது. திருமணமாகு முன் கிடைக்கும் வேலையைப் பற்றிக் கொள்வது என்ற கோணத்தில் பார்க்கலாம். அதிகம் அலைச்சல் இல்லாமல் கிடைத்த பள்ளி வேலை. முதிர்கன்னி நிலை திணிக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு பணி. திருமணமான பின் ஆசிரியப் பொறுப்பை நிரந்தரமாக்கிக் கொண்ட பெண்களிடமும் இந்தப் பிள்ளைகளை உருவாக்கும் மாதிரிப் படிமங்களைப் பெரும்பாலும் காண முடியாது. அவள் சொந்த வீட்டை, தாய்மைப் பொறுப்பை குடி தண்ணீர், தோசைமா, காய்கறி, போன்ற சில்லறைக் கடன்கள் சுமத்தும் அழுத்தங்களை