உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புது மெருகு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

புது மெருகு

பொதுவாக, உண்ணும் உணவுக்கு இவை போதும். பெரு விருந்து நுகரவேண்டுமானால், இதோ தேனடை இருக்கிறது. நன்றாக முற்றி விளைந்த அடைகளிலிருந்து தேன் சொரிந்துகொண்டே இருக்கிறது. அதைக் கலத்தில் ஏந்திக் குடிக்கவேண்டியதுதான்.

"எவ்வளவு நாளைக்கு இந்த வாழ்வு என்று நீங்கள் நினைக்கலாம். எங்கள் பறம்பு மலையின் பரப்பு உங்களுக்குத் தெரியாது. ஆகாசத்தைப் போலப் பரந்திருக்கிறது இது. அந்த ஆகாசத்திலே எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு சுனைகள் இங்கே இருக்கின்றன. ஆகையால் நீர்வளத்திலே சிறிதும் குறைவில்லை. உயிர் வாழ்வதற்குப் பிறர் கையை எதிர்பாராமல் எங்களைப் பறம்பு மலை வைத்திருக்கிறது.

"பாவம்! இதைக் கேட்டால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். உங்கள் யானைப்படை எவ்வளவோ பெரிதாக இருக்கலாம்; ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு யானையைக் கட்டி நிறுத்தியிருக்கலாம். உங்கள் தேர்ப் படை மிகப் பரந்ததாக இருக்கலாம்; கையகலம் இடம் இருந்தாலும் அங்கெல்லாம் உங்கள் தேர் நிற்கலாம். இவ்வளவு இருந்தும் ஒரு பயனும் இல்லையே! நீங்கள் தலை கீழாக நின்று முயன்றாலும் இந்த மலை உங்கள் வசமாகப் போவதில்லை; உங்கள் முயற்சி வீணாகிவிடும். உங்களுடைய ஆயுத பலத்துக்கு அஞ்சி இந்த மலையைப் பாரி கொடுக்க மாட்டான். யானை, தேர், வாள், உங்கள் வீரம் யாவும் கவைக்கு உதவாத நிலையில் உள்ளன.

"உங்களுக்குப் பறம்பு மலை அவசியம் வேண்டுமென்றால் நான் வழி சொல்கிறேன். அதை வசப்படுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/27&oldid=1548622" இலிருந்து மீள்விக்கப்பட்டது