பக்கம்:புது மெருகு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

புது மெருகு

இந்தச் சமயத்தில் இளந்தத்தன் உறையூர் வீதியிலே சென்றான். அவனைக் கண்ட ஒரு வீரன், 'இவன் யாரோ புதியவனாக இருக்கிறான். பகைவன் நாட்டிலிருந்து வருகிறானோ என்னவோ?' என்று எண்ணித் தன் படைத்தலைவனுக்கு அதனைக் கூறினான். தலைவன் பார்த்தான்; உடனே, "சந்தேகம் என்ன? நலங்கிள்ளியிடமிருந்து ஒற்றனாக வந்திருப்பான். இவனை மறித்துக் காவல் செய்யுங்கள்" என்ற கட்டளையை அவன் இட்டுவிட்டான்.

இளந்தத்தன் சிறைப்பட்டான். அவன் வார்த்தை ஒன்றும் முரட்டுப் போர்வீரர்களின் காதில் ஏறவில்லை." நான் நலங்கிள்ளியிடமிருந்து வருவது உண்மைதான். ஆனால் நான் ஒற்றன் அல்ல. அவனிடம் பாடிப் பரிசு பெற்று வருகிறேன். அவன் அளித்த பரிசுப் பொருள்களை இதோ பாருங்கள்" என்றான்.

"இதெல்லாம் வேஷம்; பொய். புலவன் போல வேஷம் போட்டால் சர்வ சுதந்திரம் உண்டென்று தெரிந்துகொண்டு இப்படிப் புறப்பட்டாய் போலும்!"

" நான் பிறவியிலேயே புலவன் தான். நான் பாடின பாட்டை வேண்டுமானால் சொல்லுகிறேன், கேளுங்கள்."

"அதெல்லாம் சூழ்ச்சி. வேறு யாராவது இயற்றிய பாட்டை நீ தெரிந்துகொண்டு இங்கே கதை பேசு கிறாய்."

"புதிய கவிதையைச் சொல்லட்டுமா? அப்பொழுதாவது நான் புலவனென்று தெரிந்துகொண்டு விட்டு விடுவீர்களா?"

"புதிய கவிதையும் வேண்டாம்; மண்ணும் வேண்டாம். அதெல்லாம் யமதர்மராஜன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/41&oldid=1548639" இலிருந்து மீள்விக்கப்பட்டது