பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 125

இறங்கி மூன்றாம் நிலைக்கு வந்து, பிறகு இரண்டாம் நிலைக்கும். முதல் நிலைக்கும் வந்தார். பிறகு மீண்டும், யோகத்தின் முதல் நிலைக்குச் சென்று அதிலிருந்து இரண்டாம் நிலையை யடைந்து அதிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்று, அதிலிருந்து நான்காம் நிலையை யடைந்து உடனே பரி நிர்வாண மோக்ஷத்தை யடைந்தார்.

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தபோது வானமும் பூமியும் அதிர்ந்தன. சகம்பதி பிரமனும், சக்கரனும் (இந்திரனும்) ஆனந்த மகாதேரரும், அநிருத்த மகாதேரரும் புத்தருக்கு வணக்கம் பாடினார்கள். தோன்றின பொருள்கள் அழியும் என்னும் உண்மையையறிந்த அறிஞரான பிக்குகள், பகவன் புத்தருடைய பிரிவினால் உண்டான துக்கத்தை அடக்கிப் பொறுத்துக் கொண்டார்கள். திடமனம் இல்லாதவர்கள் அழுது புலம்பினார்கள்.

தீப்படுத்தியது

விடியற்காலையில் அநிருத்த மகாதேரர், ஆனந்த மகாதேரரை மள்ளர் இடத்திற்கு அனுப்பி பகவன் புத்தர் பரிதிர்வாண மோக்ஷ்ம் அடைந்தச்செய்தியைத் தெரிவித்தார். மள்ளர்கள் மனம் வருந்தி ஆண்களும் பெண்களும் எல்லோரும் சேர்ந்து பூமாலைகளையும் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு இன்னிசை வாத்தியங்களுடன் வந்து பகவன் புத்தருடைய திருமேனிக்கு அலங்காரம் செய்து வணங்கி இசைகள் வாசித்தும் அவர் புகழைப் பாடியும் கொண்டாடினார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் நடைபெற்றன. ஏழாம்நாள் எட்டு மள்ளர் தலைவர்கள், பகவன்புத்தருடைய திருமேனியைத் தோளில் தூக்கிக் கொண்டு மலர் மழை பொழிய, தகனம் செய்வதற்கு ஏற்படுத்தியிருந்த மகுடபந்தனம் என்னும் இடத்திற்குக் கொண்டு போனார்கள். கொண்டுபோய் தகனமேடையில் திருமேனியை வைத்து நான்கு மள்ளர். தலைவர்கள் தீ வைத்தார்கள். அவர்கள் வைத்த தீ பற்றி எரியவில்லை. அதனால் வியப்படைந்த அவர்கள், அதன் காரணம் என்னவென்று அநிருத்தரைக் கேட்டார்கள்.

"காசிப மகாதேரர் வருகிற வரையில் தீ பற்றாது. காசிப மகாதேரர், பகவன் புத்தருடைய பரிதிர்வாணத்தைக் கேள்விப்பட்டு பிக்குகளுடன் பாவாபுரியிலிருந்து குசி நகரத்துக்கு இப்போது வந்துகொண்டிருக்கிறார்" என்று கூறினார். அப்போது காசிப மகாதேரரும் அவ்விடம் பிக்குகளுடன் வந்து, மேடைமேல் எழுந்தருளப்பண்ணியிருந்த பகவன் புத்தருடைய திருமேனியைச்