பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 / புத்தரின் வரலாறு

மகாநாமர் தமது மகள் யசோதரையை அழைத்து வந்து உயரமான மேடைமேல் அமரச் செய்தார். "படைக்கலப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவருக்கு யசோதரையை மணம் செய்து கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.

இப்படைக்கலப் போட்டிக்குச் சகாதேவர் என்பவர் நடுநிலையாளராக நியமிக்கப்பட்டார். முதலில் அம்பு எய்யும் போட்டி நடந்தது. அதாவது, நெடுந்தூரம் அம்பு எய்யும் போட்டி. ஆனத்தன் என்பவர் இரண்டு குரோச தூரத்திலும், நந்தன் ஆறு குரோசு தூரத்திலும், மற்றொருவர் எட்டுக் குரோச தூரத்திலும், சித்தார்த்த குமாரன் பத்துக் குரோச தூரத்திலும், அம்பு எய்வதற்குக் குறிகளை ஏற்படுத்தினார்கள். பிறகு இவர்கள் எல்லோரும் வில்லை வளைத்து அம்பு எய்தார்கள். அவரவர்கள் வைத்த குறிவரையில் அவரவர்கள் அம்பு எய்தனர்.

சித்தார்த்த குமாரன் முறை வந்தபோது, அவரிடம் வில்லைக் கொடுத்தார்கள். குறியை எய்வதற்கு முன்பு வில்லைச் சோதிப்பதற்காகக் குமாரன் வில்லை வளைத்தார். அது ஒடிந்து போயிற்று. அப்போது அவர், "வேறு நல்ல வில் இங்கே இல்லையா?" என்று கேட்டார்.

சுத்தோதன அரசர், "இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் கூறினார். "எங்கே? அதை எனக்குக் கொடுங்கள்" என்றார் குமாரன்.

"உன்னுடைய பாட்டன் சிம்மஹணு அரசனுடைய வில் ஒன்று உண்டு. அதை ஒருவரும் வளைக்க முடியாதபடியால் அது கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டுவந்து கொடுங்கள்" என்றார் சுத்தோதன அரசர்.

உடனே ஏவலாளர் விரைந்து சென்று அந்த வில்லை தூக்கிக்கொண்டு வந்தார்கள். சித்தார்த்த குமாரன் அதனைக் கையில் வாங்கி நாணைப்பூட்டி அம்பு தொடுத்து குறி பார்த்து வில்லை இழுத்து அம்பை எய்தார். பத்துக் குரோசத்துக்கப்பால் இருந்த குறியில் பாய்ந்து அதை ஊடுருவிச் சென்றது அம்பு. அதைக்கண்ட எல்லோரும் கைகொட்டி ஆரவாரம்செய்து மகிழ்ந்தார்கள்.

தொலைதூரம் அம்பு எய்யும் போட்டியில் சித்தார்த்த குமாரன் வெற்றி பெற்றார்.

இரண்டாவதாக அம்பை ஊடுருவச்செலுத்தும் போட்டி பந்தயம் நடந்தது. ஏழு பனைமரங்கள் வரிசையாக இருந்தன. அந்த ஏழு பனைமரங்களையும் ஊடுருவிச் செல்லும்படி அந்த அம்பு எய்ய