உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 / புத்தரின் வரலாறு

குறிப்பிட்ட நல்ல நாளிலே சித்தார்த்த குமாரனுக்கும் யசோதரையாருக்கும் திருமணம் இனிதுநடந்தது. சித்தார்த்த குமாரன் பலவிதமான நகைகளையும் அணிகலன்களையும் மணமகளுக்குப் பரிசு அளித்தார். யசோதரை குமாரி, ஆடல்பாடல்களில் தேர்ந்த ஐந்நூறு பணிப்பெண்களுடன் அரண்மனைக்கு வந்தார்.

தேவேந்திர மாளிகை போன்ற அரண்மனையிலே சித்தார்த்த குமாரனும் யசோதரை குமரியும் எல்லாவித இன்ப சுகங்களைத் துய்த்து இந்திரனும் சசிதேவியும்போல வாழ்ந்தார்கள்.

சுத்தோதன அரசர், சித்தார்த்தகுமாரனின் இல்வாழ்க்கையில் பெரிதும் கருத்தாக இருந்தார். சித்தார்த்த குமாரன் துறவு பூண்டு புத்த பதவியடைவார் என்று அசித முனிவர் சொல்லிய வாய்மொழி அரசருடைய மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. குமாரனை இல்வாழ்க்கையிலேயே இருக்கச் செய்து சக்கரவர்த்தி பதவியைப் பெறச் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆகவே, இல்லறத்தில் விருப்பு கொள்ளும்படியான சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொடுத்தார். ஆடல் பாடல் இன்னிசை குழல்யாழ் முழவு முதலிய கலைகளில் வல்லவரான அழகுள்ள இளமங்கையர் எப்போதும் குமாரனைச் சூழ்ந்திருந்து அவருக்கு மகிழ்ச்சியையூட்டிக் கொண்டிருக்க ஏற்பாடு செய்தார். அரண்மனையைச் சூழ்ந்து கால்காத தூரம் வரையில் சேவகர்களை நியமித்துக் கிழவர் துறவிகள்நோயாளிகள் பிணங்கள் முதலிய அருவெறுப்பைத் தரும் காட்சிகள் குமாரன் பார்வையில் படாதபடி காவல் வைத்தார். மேலும் அரண்மனையைவிட்டு வெளியில் வராதபடி எல்லாவற்றையும் மாளிகையிலேயே அமைத்துக் கொடுத்தார். இவ்வாறு, குமாரன் இல்வாழ்க்கையிலேயே நிலைத்து நிற்கும்படி பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவைத்தார்.

விம்பசார அரசனின் அச்சம்

அக்காலத்திலே சாக்கிய ஜனபதத்துக்குத் தெற்கேயிருந்த மகத தேசத்திலே சிரேணிக குலத்தில் பிறந்த விம்பசாரன் என்னும் அரசன் அரசாண்டு கொண்டிருந்தான். விம்பசாரன், வேறு அரசர் யாரேனும் வந்து தன்னை வென்று தனது அரசாட்சியைக் கவர்ந்து கொள்வரோ என்று அச்சங்கொண்டிருந்தான். ஆகவே, அடிக்கடி அமைச்சர்களுடன் கலந்து இது பற்றி ஆலோசிப்பது வழக்கம். வழக்கம்போல ஒரு சமயம் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான். "அறிவுமிக்க அமைச்சர்களே! நம்மை வெல்லக்கூடிய ஆற்றல் உடைய வேற்றரசர்