பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 27

நகரத்தின் நான்கு சாலைகள் கூடுகிற நாற்சந்தியிலே சித்தார்த்த குமாரன் அமர்ந்து பேரொலி யுண்டாகும்படி முரசைக் கொட்டிக்கொண்டிருந்தார்.

நகரத்தின் நடுவே ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து சித்தார்த்த குமாரன் முத்து, மணி, மாணிக்கம், இரத்தினம் முதலியவற்றைச் சிதறிக் கொண்டிருக்க, அவற்றை மக்கள் திரண்டு வந்து பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கனவுகளைக் கண்ட சுத்தோதன அரசர் விழித்தெழுந்தார். நிமித்திகர்களை அழைத்து இக்கனவுகளின் கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்டார். அவர்கள் இக்கனவுகளின் கருத்துத் தெரியாமல் திகைத்தார்கள். ஒரு நிமித்திகர் நெடுநேரம் யோசித்து இவ்வாறு விளக்கம் கூறினார்.

கொடியை மக்கள் தூக்கிகொண்டு போனது, சித்தார்த்த குமாரன் தேவர்கள் சூழ இத்தகரத்தைவிட்டு வெளிச்சென்று துறவு கொள்வார் என்பதைக் குறிக்கிறது.

பத்து மதயானைகள் இழுத்து தேரை ஊர்ந்துசென்றது, பத்துப் பாரமிதைகளைச் செய்திருப்பதனாலே, அப்பாரமிதைகளின் உதவி கொண்டு சித்தார்த்த குமாரன் உயர்ந்த போதிஞானம் அடைவார் என்பதைக் குறிக்கிறது.

நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிச்சென்றது, குமாரன் நிச்சயமாகப் புத்த ஞானத்தை அடைவார் என்பதைக் குறிக்கிறது.

வானத்தில் சக்கராயுதம் சுழன்று சென்றது, குமாரன் போதிஞானம் பெற்று அறநெறியை தேவருக்கும் மனிதருக்கும் போதிப்பார் என்பதைத் தெரிவிக்கிறது.

குமரன் பேரொலியுடன் முரசு கொட்டியது. அவர் போதிஞானம் பெற்று உபதேசம் செய்யும் அறநெறி உலகத்திலே வெகுதூரம் பரவும் என்பதைத் தெரிவிக்கிறது.

உயரமான இடத்தில் அமர்ந்து மணியையும்முத்தையும் வீச அதனை மக்கள் பொறுக்கலானார்கள் என்னும் கனவு, புத்த பதவியையடைந்து உலகத்திலே புத்த தர்மத்தைப் பரப்புவார் என்பதையும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் குறிக்கின்றன.

இவ்வாறு நிமித்திகர் கனவுக்கு விளக்கம் கூறியதைக் கேட்டு சத்தோதன அரசர் பெரிதும் கவலையடைந்தார். தமது மகனைத்துறவு