பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 29

"அவர் ஒரு கிழவர்" என்றான் சன்னன்.

"கிழவர் என்றால் என்ன?"

கிழவர் என்றால் இளமை நீங்கிய முதியவர். இவருடைய உடம்பும் பொறிகளும் புலன்களும் வலிமைகுன்றி விட்டன. இளமையோடிருந்த இவர் நரைத்துத் திரைத்து மூப்படைந்து தள்ளாதவராயிருக்கிறார். மரணம் இவரை எதிர்நோக்கியிருக்கிறது."

"கிழத்தனம் இவருக்கு மட்டுமா? எல்லோருக்கும் உண்டா?"

"எல்லோருக்கும் கிழத்தனம் உண்டு. இளைஞர் எல்லோரும் முதியவராக வேண்டியவரே."

"நானும் கிழவன் ஆவேனா?"

"ஆமாம், சுவாமி! ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி எல்லோருக்கும் கிழத்தனம் உண்டு."

இதைக் கேட்ட சித்தார்த்த குமாரனுக்கு மனத்தில் பல சிந்தனைகள் தோன்றின. தேர் வீதி வழியே சென்றது. சற்றுத்தூரம் சென்றபோது இன்னொரு காட்சியைக் கண்டார். நோயாளி ஒருவர் நோயினால் வருந்தி மல மூத்திரங்களைக் கழித்து அதிலே விழுந்து எழுந்திருக்க முடியாமல் இருக்க அவரைச் சிலர் தூக்கிவிட்ட காட்சியை அரச குமாரன் காண நேரிட்டது. சன்னனை நோக்கி "இது என்ன?" என்று கேட்டார்.

"இவர் ஒரு நோயாளி. இந்த ஆளின் உடம்பிலே நோய் உண்டாகி வருந்துகிறார். மனிதருக்கு நோய் வருவது உண்டு." என்று சன்னன் விளக்கிக் கூறினான்.

"எல்லோருக்கும் நோய் வருமா?"

"ஆமாம் சுவாமி/ மனிதருக்கு நோய் வருவது இயற்கையே!"

சன்னன் கூறியது சித்தார்த்த குமாரனின் சிந்தனையைத் தூண்டியது. அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். தேர் நகர்ந்தது. மேலும் சிறிது தூரம் சென்றபோது அரசகுமாரன் மற்றொரு காட்சியைக் கண்டார். இறந்துபோன ஒருவனுடைய பிணத்தை அவன் உறவினரும் நண்பர்களும் சுமந்துகொண்டு சுடுகாடு சென்றனர். இந்தக் காட்சியைக் கண்ட சித்தார்த்த குமாரன் இதைப் பற்றித் தேர்ப்பாகனை வினவினார். சன்னன் இவ்வாறுவிளக்கங் கூறினான்:

"இந்தப் பிணம் நம்மைப் போன்று உயிருடன் இருந்த ஒரு ஆள். இவன் கிழவனாகி நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். போன உயிர் மறுபடியும் உடம்பில் வராது. ஆகையால் இவன் உடம்பை