பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 39

இவர், இதை எப்படி உண்ணமுடியும்? உண்ண முடியாமல் வாய் குமட்டியது. இன்னும் தான் அரசகுமாரன் அல்லர் என்பதையும், எல்லாவற்றையும் துறந்த துறவி என்பதையும் தமக்குத் தாமே சிந்தித்துத் தெளித்து தமக்கிருந்த அருவெறுப்பை நீக்கிக் கொண்டு அந்த உணவை உட்கொண்டார்.

விம்பசாரன் வேண்டுகோள்

சேவகர், அரண்மனைக்குச்சென்று கெளதம துறவி பண்டவ மலையடியில் தங்கியிருப்பதை விம்பசார அரசனுக்குத் தெரிவித்தார்கள். விம்பசாரன், துறவியைக் காண பண்டவமலைக்கு வந்தான். வந்து, கௌதம துறவியைக் கண்டு வியப்படைந்தான். பின்னர் அரசன் கெளதரை நோக்கி இவ்வாறு கூறினான்: “தாங்கள் இளவயதுள்ளவர்; இந்த வயதில் துறவு எதற்காக? இந்த அங்க மகத தேசங்களில் எதையேனும் ஒன்றைத் தங்களுக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். தாங்கள் இருந்து நாட்டுக்கு நன்மை செய்யுங்கள். தங்களுடைய குலம் கோத்திரங்கள் யாவை?"

விம்பசார அரசன் கூறியதைக் கேட்ட கௌதமர், கபிலவத்து நகரத்தின் பக்கமாகத் தமது கையைநீட்டிக்காட்டி, "அதோ, அந்தக் கபிலவத்து நகரத்திலே சாக்கிய குலத்திலே பிறந்தவன் நான். அந்த நகரத்து அரசரான சுத்தோதனர் என்னுடைய தந்தை. மகாராஜனே! நானும் அரசகுமாரனாக இருந்தவன். அரசபோகங்களும் இன்பசுகங்களும் இனி எனக்கு வேண்டா. ஆகையினாலே தாங்கள் அளிப்பதாகக் கூறும் அங்கநாடும் மகதநாடும் எனக்கு வேண்டா. மெய்ஞ்ஞானத்தை யடையும் பொருட்டு உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டேன்" என்று கூறினார்.

கௌதமர் கூறியதைக் கேட்ட விம்பசார அரசன், தாம் நேரில் பாராமலே தமது மனத்தில் நட்புரிமை கொண்டிருந்த சித்தார்த்த குமாரன் இவர் என்பதை யறிந்து, பெரிதும் விப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, தமது நாட்டில் சரிபகுதியைத் தருவதாகவும் அதனை அரசாள வேண்டும் என்றும் கூறி மீண்டும் வேண்டினான். கௌதமர் அரசனது வேண்டுகோளை உறுதியாகவும் வன்மையாகவும் மறுத்தார். கடைசியாக விம்பசார அரசன் இவ்வாறு கூறினான்: "சுத்தோதன அரசருடைய சித்தார்த்த குமாரன் நான்கு நிமித்தங்களைக் கண்டு துறவு பூண்டு புத்தராகப் போகிறார் 'என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் புத்த பதவியடையப் போவது உறுதி, தாங்கள் புத்தரான பிறகு, என்னுடைய நாட்டிற்கு