பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 / புத்தரின் வரலாறு

இந்த மூச்சு பயிற்சியை செய்துவந்தார். காதுகள் வழியாக மூச்சு வெளிவருவதையும் தடுத்து இந்தத் தியானத்தைச் செய்தார். அப்போது கண்களின் வழியாக மூச்சு வெளிப்பட்டது.அப்போதும் விடாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு அப்பிரணத் தியானம் செய்தார். அப்போது பொறுக்க முடியாத வலி தேகத்தில் உண்டாயிற்று. பலமுள்ள ஒரு ஆள் வாரினால் இழுத்துக் கட்டுவதுபோல இவருடைய தலையில் வலி உண்டாயிற்று.

வாய், மூக்கு, காது, கண் இவைகளின் வழியாக மூச்சு வெளிப்படுவதைத் தடுத்துவிட்டபடியினாலே இவருடைய வயிற்றில் கத்தியால் குத்திக் கீறுவதுபோன்று வலி உண்டாயிற்று. பலசாலிகள் இருவர் வலியற்ற ஒரு ஆளைப்பிடித்துத் தள்ளி நெருப்புத் தணலில் அழுத்திப் புரட்டினால் எப்படியிருக்குமோ அதுபோன்று உடம்பு முழுவதும் எரிவது போன்று இருந்தது. இவ்வாறு கொடிய துன்பமும் வலியும் ஏற்பட்ட போதிலும் அப்பிரணத்தியானத்தை விடாமல் செய்துவந்தார். கடைசியாக இவர் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தார்.

அப்போது இவரைக்கண்ட தேவர்கள் சிலர், "அரஹந்தர்கள் இறந்தவர்களைப் போலவும் அசைவற்றுக் கிடப்பார்கள். இது அர்ஹந்தர் இருக்கும் ஒரு நிலை. கௌதமரும் அர்ஹந்த நிலையையடைந்து இவ்வண்ணம் இருக்கிறார்" என்று கூறினார்கள். வேறு சில மக்கள் இவர் விழுந்து கிடப்பதைக் கண்டு, இவர் இறந்து போனார் என்று கருதினார்கள். அவர்கள் சுத்தோதன அரசனிடம் சென்று, "உமது மகன் சித்தார்த்தர் இறந்துவிட்டார்" என்று சொன்னார்கள். இதைக்கேட்ட அரசன், "என்னுடைய மகன் புத்த நிலையையடைந்த பிறகு இறந்தாரா, அல்லது அந்நிலையை யடைவதற்கு முன்பு இறந்தாரா?" என்று அவர்களை வினவினர். அதற்கு அவர்கள், "புத்த பதவியடைவதற்கு முன்பே இறந்து விட்டார்" என்று விடையளித்தார்கள். அதற்கு அரசன், “என் மகன் புத்த பதவி அடைவதற்கு முன்பு இறக்கமாட்டார். நீங்கள் சொல்வது தவறு" என்று கூறி அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

மூர்ச்சையடைந்து தரையில் விழுந்த கௌதம முனிவர் நெடுநேரம் சென்றபிறகு மூர்ச்சை தெளிந்து எழுந்தார். பிறகு, "இனி உணவு கொள்ளாமல் பட்டினி நோன்பு நோற்பேன்" என்று தமக்குள் தீர்மானம் செய்துகொண்டார். இவருடைய எண்ணத்தையறிந்த தேவர்கள் இவரிடம் வந்து, "போதி சத்துவரே! தாங்கள் உணவு கொள்ளாமல் உண்ணா நோன்பு நோற்பீரானால், தங்கள் உடம்பில்