பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 55

சென்று காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அஜபாலன்[1] என்னும் பெயருள்ள ஆலமரத்தண்டை சென்று அம்மரத்தின் அடியில் அமர்ந்தார். அவ்விடத்தில் நெடுநேரம் தங்கியிருந்தார்.

பாயச உணவு

அன்று வைகாசித் திங்கள் வெள்ளுவாநாள் (முழு நிலா நாள்.) அருகில் உள்ள சேனானி என்னும் கிராமத் தலைவனுடைய மகள் சுஜாதை என்பவள்; தான் நேர்ந்து கொண்ட பிரார்த்தனையைச் செலுத்த வேண்டிய நாள். சுஜாதை மணப்பருவம் அடைந்தபோது ஒரு பிரார்த்தனை செய்துகொண்டாள். தனக்குத் தகுந்த கணவன் வாய்த்து மணம் செய்துகொண்டு பிள்ளைப்பேறு உண்டாகி, அப்பிள்ளையும் ஆணாகப் பிறக்குமானால் அஜபால மரத்தில் அமர்ந்திருக்கும் தெய்வத்திற்குப் பொன் பாத்திரம் நிறையப் பால் பாயசம் வழங்குவதாகப் பிரார்த்தனை செய்துகொண்டாள். அதன்படியே சுஜாதைக்குத் தகுந்த கணவன் வாய்த்துப் பிள்ளைப் பேறும் உண்டாயிற்று. ஆகவே தனது பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக அவள் அன்று அதிகாலையில் எழுந்து பசுக்களைப் பால்கறத்து பாயசம் காய்ச்சினாள். பாயசம் காய்ச்சும்போதே தன் பணிப்பெண் புண்ணியை என்பவளை அழைத்து, அஜபால மரத்தண்டை சென்று அந்த மரத்தடியை அலகிட்டுச் சுத்தம் செய்து வரும்படி அனுப்பினாள். அவ்வாறே அப்பணிப்பெண் ஆலமரத்திற்குச் சென்றபோது, அந்த மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் கௌதம முனிவரையும் அவர் முகத்தில் காணப்பட்ட தெய்வீக ஒளியையும் கண்டு வியப்படைந்தாள். அஜபால மரத்தில் வசிக்கும் தெய்வம் என்றே அவள் நினைத்துக் கொண்டாள். உடனே ஓடோடியும் வந்து இந்தச் செய்தியைச் சுஜாதைக்குச் சொன்னாள். சுஜாதை பெரிதும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தவளாய், தான் சமைத்த பால் பாயசத்தைப் பொன் பாத்திரத்தில் ஊற்றி அதன்மேல் மற்றொரு பாத்திரத்தை மூடி அதைத் தானே தன் தலைமேல் வைத்துக்கொண்டு ஆலமரத்திற்கு வந்தாள். அவளுடன் அவளுடைய பணிப் பெண்ணும் மற்றும் தோழிப் பெண்களும் வந்தார்கள்.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே, அஜபால ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் போதிசத்துவரைச் சூழ்ந்து ஒருவிதமான தெய்விக ஒளி காணப்பட்டதை சுஜாதை கண்டாள். கண்டு, வியப்புடனும் பக்தியுடனும் அவ்ரை அணுகி அவர் முன்பு பாயசப் பாத்திரத்தை


  1. அஜபாலன் - ஆட்டிடையன்