பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 / புத்தரின் வரலாறு

மரக்கிளைகளில் மயில்கள் அமர்ந்திருந்தன. குயில்கள் இனிமையாகக் கூவின மான்கூட்டங்கள் அமைதியாக உலவின. இசிபதனம் (மான்வனம்) என்னும் அந்தத் தோட்டம் அமைதியாகவும் அழகாகவும் விளங்கிற்று கொண்டஞ்ஞர்,பத்தியர், வப்பர், மகாநாமர், அஸ்ஸஜி என்னும் பெயருள்ள ஐந்து முனிவர்களும் தமது ஆசிரமத்துக்கு வெளியே வந்து அமர்ந்தார்கள்.

பகவன் புத்தர் அவர்களுக்கு எதிரிலே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேவர்களும் பிரமர்களும் யக்ஷர்களும் அவ்விடம் வந்து அமர்ந்தார்கள். ஓசைகள் அடங்கி அமைதியாக இருந்தது. பறவைகளும் விலங்குகளும் தத்தம் ஓசையை அடக்கிக்கொண்டு தத்தம் இடத்திலிருந்து பகவன் புத்தர் உபதேசிக்கும் இனிய குரலைக் கேட்டன. புத்தர் பெருமான் ஐந்து தாபதர்களையும் விளித்து இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்:

"பிக்குகளே! துறவிகள் விலகவேண்டிய இரண்டு எல்லைகள் உள்ளன. மாறுபட்ட இந்த இரண்டு எல்லைகள் எவை என்றால், காம சுகல்லிகானுயோகம், அத்தகில மதானுயோகம் என்பன. காம சுகல்லிகானுயோகம், இழிவும் தாழ்வும் விகாரமும் உள்ளது. இறுதியிலே தீமை பயப்பது. அத்தகில மதானுயோகம் என்பது, உடம்பை அதிகமாக வாட்டி ஒடுக்கி அடக்கித் துன்பங்கொடுப்பது; இதுவும் இறுதியில் யாதொரு பயனையும் கொடாமல் வீணாகப் போகிறது. பிக்குகளே! இந்த இரண்டு அந்தங்களையும் நீக்கி இடைவழியான ஒரு நெறியைத் ததாகதர் கண்டுபிடித்திருக்கிறார்.

"இந்த நெறியானது நல்லறிவையும் நற்காட்சியையுங் கொடுத்து ஞானத்தையும் சம்புத்தியையும் நிர்வாண மோக்ஷத்தையும் அளிக்கிறது. ததாகதரால் கண்டறியப்பட்ட இந்த வழி யாது? இதுதான் எட்டு நெறி என்று கூறப்படும் அஷ்டாங்க யோகம் என்பது. இவை:

1. ஸம்மா திட்டி-நற்காட்சி.

2. ஸம்மா ஸங்கப்போ - நல்லெண்ணங்கள்

3. ஸம்மாவாசா - நல்வாய்மை

4. ஸம்மாகம் மந்தோ - நற்செய்கை

5. ஸம்மா ஆஜீவோ - நல்வாழ்க்கை

6. ஸம்மா வியாயாமோ-நன் முயற்சி

7.ஸம்மாஸதி-நற்கடைப்பிடி

8. ஸம்மா ஸமாதி-நற்றியாளம்.