பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 83

கூறினார்கள். இந்தச் சந்தோஷ ஆரவாரம் இம்மண்ணுலகத்தைக் கடந்து பிரமலோகம் வரையில் சென்றது. சக்கரவாளம் அசைந்து அதிர்ந்தது. தேவர்களின் தெய்விக ஆற்றலினால் உண்டாகிற ஒளியையும் மங்கச்செய்கிற, ஆற்றல் மிக்க ஒருபெரிய தெய்விக ஒளி உலகம் எங்கும் தோன்றியது.

அப்போது பகவன் புத்தர், "உண்மையாகவே பிக்கு கொண்டஞ்ஞர் இதை அறிந்துகொண்டார். இதை அறிந்து கொண்டார்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுமுதல் பிக்கு கொண்டஞ்ஞருக்கு அஞ்ஞாகொண்டஞ்ஞர் (ஞானம் பெற்ற கொண்டஞ்ஞர்) என்னும் பெயர் ஏற்பட்டது.

இரண்டாம் நாள் வப்ப முனிவரும், மூன்றாம் நாள் பத்திய முனிவரும், நான்காம் நாள் மகாநாம முனிவரும், ஐந்தாம் நாள் அஸ்ஸஜி முனிவரும் தர்மோபதேசம் கேட்டு ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். இவர்கள் புத்தரிடம் பிக்கு ஆனார்கள். பகவன் புத்தர் அவர்களை நோக்கி, "பிக்குவே! இங்கு வா. தர்மம் நன்றாக உபதேசிக்கப்பட்டது. எல்லாத்துன்பங்களையும் அழித்து, உயர்நிலை பெறுவதற்காக சுத்தமான பிரமசரியத்தை அனுசரிப்பாயாக" என்று கூறி அவரைச் சங்கத்தில் சேர்த்தார். அப்போது இந்த ஆறு பேர்கள் பௌத்தமதத்தில் இருந்தார்கள்.

பிறகு ஒருநாள், பகவன் புத்தர் கொண்டஞ்ஞர் முதலான ஐந்து பிக்குகளுக்கு அனாத்ம இலக்கணச் சூத்திரத்தை உபதேசம் செய்தார். அதன் சுருக்கம் வருமாறு:- பிக்குகளே! ரூபம் ஆன்மா அல்ல. நமக்கு உள்ள இந்த உருவம் ஆன்மாவாக இருந்தால், இதற்கு வியாதி வரக்கூடாது. எல்லோரும் தங்கள் உருவத்தைப் பற்றி இப்படி இருந்தால் நல்லது. இப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அவரவர் நினைப்பதுபோல உருவம் அமைவது இல்லை.

வேதனை ஆன்மா அல்ல. சஞ்ஞா, சமஸ்காரம், விஞ்ஞானம் என்பவைகளும் ஆன்மா அல்ல என்பதைப் பற்றியும் தேகத்தைப் பற்றிக் கூறியது போலவே விளக்கிக் கூறினார். பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்து, "பிக்குகளே உருவம் நித்தியமா, அநித்தியமா? நிலை பெற்றிருப்பதா, அழிந்துவிடுவதா?" என்று வினவினார்.

பிக்குகள், "தேகம் (உருவம்) அநித்தியமானது; அழிந்துவிடக் கூடியது" என்று விடை கூறினார்கள்.

பகவன் புத்தர்: "அநித்தியமான, அழிந்துவிடுகிற பொருள் துக்கத்தை தருமா, சுகத்தைத் தருமா?"