பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 85

நாலக சூத்திரம்

பிறகு ஒருநாள் நாலகமுனிவர், பகவன் புத்தரிடம் வந்தார். இந்த நாலக முனிவர், புத்தர் குழந்தையாயிருந்தபோது தீர்க்கதரிசனம் கூறின அசித முனிவரின் மருகன். அசித முனிவரின் ஆணைப்படி, துறவு பூண்டு இமயமலைச் சாரலில் சென்று தவம் செய்திருந்தார். சித்தார்த்த குமாரன் புத்த பதவியடைந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் உபதேசம் பெறுவதற்காக நாலக முனிவர் இமயமலையிலிருந்து பகவன் புத்தரிடம் வந்தார். வந்து வணங்கி அவரிடம் உபதேசம் கேட்டார். பகவன் புத்தர் நாலக முனிவருக்கு மோனெய்ய விரதத்தை உபதேசித்தார். (இந்த உபதேசத்தைச் சூத்திர பிடகத்திலே நாலக சூத்திரத்தில் காண்லாம்) இவ்வுபதேசத்தைப் பெற்ற நாலக முனிவர் மீண்டும் இமயமலைக்குச் சென்று, பகவன் புத்தர் உபதேசப்படி இருந்து ஏழு திங்களுக்குப் பிறகு உயர்ந்த நிலையைப் பெற்றார்.

யசபுத்திரனுக்கு உபதேசித்தல்

அக்காலத்திலே காசி நகரத்திலே மிக்க செல்வந்தனான தனபதியின் மகன் யசகுலபுத்திரன் இன்பசுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருநாள் விடியற்காலையில் விழித்துக் கொண்டு பார்த்தபோது மகளிரின்இருப்பைக்கண்டு, சித்தார்த்த குமரன் இல்லறத்தில் வெறுப்புக்கொண்டதுபோல, வெறுப்புக் கொண்டு மாளிகையைவிட்டுப் புறப்பட்டு வந்தான். வந்தவன் புத்தர் எழுந்தருளியிருக்கும் இசிபதனத்திற்கு வந்தான். அப்போது விடியற்காலம் ஆகையால், பகவன் புத்தர் ஆசனத்தில்அமர்ந்து ஞானக் கண்ணினாலே உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். யசகுல புத்திரன் வரப்போவதையும் வந்து அறநெறி கேட்டுத் துறவு கொள்ளப்போவதையும் அறிந்தார்.

அப்போது யசகுல புத்திரன் பகவரிடம் வந்து வணங்கினான். பகவர் அவனை உட்காரச்சொல்லி அவனும் அமர்த்தான். அவனுடைய பக்குவ நிலையையறிந்த பகவர் தானுங் கொடுப்பதனாலும் சீலம் அனுஷ்டிப்பதனாலும் கிடைக்கும் பயன்களையும் இவற்றினாலே கிடைக்கும் உயர்ந்த இன்ப சுகங்களையும் கூறி, இந்தச் சுகங்கள் குற்றம் உள்ளவை, கீழானவை. அசுத்தமானவை என்பதை விளக்கி, உத்தமமான உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று உபதேசம் செய்தார்.