பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 / புத்தரின் வரலாறு

என்னும் பெயரையுடையவர்கள் தமது நண்பனான யசகுமரன் துறவு பூண்டதைக்கேட்ட இந்த நண்பர்கள் இசிபதனத்திற்கு வந்து, யச அரகந்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். யசமுனிவர் அந்நான்கு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புத்தரிடம் சென்றார். சென்று வணங்கி இவர்களுக்கு உபதேசம் செய்தருளும்படி பகவரை வேண்டினார்.

பகவன்புத்தர் இவர்களுக்குத் தானகாதை முதலானவைகளை படிப்படியாக உபதேசம் செய்தார். அப்போது இவர்களுக்குக் கிலேசங்கள் (மனமாசுகள்) நீங்கின. பின்னர் இவர்களுக்கு நான்கு வாய்மைகளை விரிவாக உபதேசம் செய்தார். அதைக்கேட்ட இவர்கள் ஸ்ரோதா பத்தி பலன் அடைந்து தங்களுக்குத் துறவு கொடுக்கும்படி கேட்டார்கள். பகவர் இவர்களை ஏஹி பிக்ஷுதாவாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் பகவன் புத்தர் இவர்களுக்கு அறநெறியைப் போதித்தார். அது கேட்ட இந்தப் பிக்குகள் அரஹந்தரானார்கள்.

ஐம்பதின்மர் துறவு

யச அரஹந்தருடைய பழைய நண்பர்கள் ஐம்பதின்மர் வெவ்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள், யசருடைய துறவைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தார்கள். வந்து வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். யசஅரஹந்தர் ஐம்பது நண்பர்களையும் வரவேற்று, அவர்களை அழைத்துக்கொண்டு பகவன்புத்தரிடம் சென்றார். பகவர் அவர்களுக்கத் தானகாதை முதலியவைகளை முறைப்படி உபதேசம் செய்தார். இதனாலே அவர்களின் உள்ளம் பண்பட்டுச் சாந்திநிலையை யடைந்தது. அதன்பிறகு பகவர் நான்கு வாய்மைகளை அவர்களுக்கு நன்கு உபதேசித்தார். இவ்வுபதேசத்தைக் கேட்டு ஐம்பது பேரும் ஸ்ரோதாபத்திபலன் அடைந்தார்கள். அவர்கள் தங்களுக்குத் துறவு கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். பகவர் அவர்களுக்கு ஏகபிக்ஷுதா என்னும் துறவைக்கொடுத்தார். பின்னர் மீண்டும் தர்மோபதேசம் செய்தருளினார். அதனால் அவர்கள் எல்லோரும் அரஹந்த பலன் அடைந்தார்கள்.

அப்போது பகவன் புத்தரை உள்ளிட்டு அறுபத்தோரு அரஹந்தர்கள் இருந்தார்கள்.