பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அதிசயப் பெண்

எதை வேண்டுமானாலும் ஒரு பெண் விட்டுக் கொடுக்க - துறக்க தயாராக இருப்பாள். ஆனால் தன் கணவனுடைய ஸ்தானத்தை மட்டும் அவள் யாருக்காகவும் இழக்கவோ விட்டுக் கொடுக்கவோ இணங்கமாட்டாள். தன் புருஷன் தன்னைத் தவிர வேறொரு பெண்ணிடம் அன்பு கொண்டிருக்கிறான் என்பதையோ அல்லது தன் நாயகன் மேல் அந்நியப் பெண் ஒருத்தி ஆசை காட்டுகிறாள் என்பதையோ சகித்துக் கொள்வதோடு, ஆதரவு காட்டவும் வேண்டுமானால் - அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மனோ பலம் இருக்கவேண்டும்? லட்சுமிக்கு அந்த மனோபலத்தை இறைவன் அளித்திருந்தான் போலும்!

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாலும் புதுமணமான இளம் பெண்தான் அவளும், கணவனைப் பற்றிய ஆயிரமாயிரம் கனவுகளும் இன்ப நினைவுகளும் லட்சுமியின் உள்ளத்திலும் கிளைத்துக் கொண்டுதான் இருந்தன. ஆயினும் இவற்றையெல்லாம் மீறி தன் கணவ ருக்கும் சுந்தரிக்குமிடையே உள்ள காதலை எண்ணிப் பார்த்தாள். கோபத்துக்குப் பதில் கருணை தான் பிறந்தது. ஆத்திரத்துக்குப் பதில் ஒர் அபலைப் பெண்ணின் வாழ்வை எண்ணி அன்புதான் அவள் உள்ளத்தில் இடம் பெற்றது. சுந்தரிக்குப் பணமும் காசும் இருக்கலாம்; ஆனால் அவளை விடத் தானே ஒரு வகையில் சீமாட்டியாக லட்சுமிக்குப் பட்டது. அந்த வகையில் சுந்தரிக்குத் தன்னாலான உதவியைச் செய்வது கடமை என்றே அவளுக்குத் தோன்றியது.