உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பூர்ணசந்திரோதயம்-1 அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பாஷணையை விவரித்துச் சொல்லுமுன் பஞ்சண்ணாராவ் என்பவன் யாவனென்பதையும், அவனது குணாதிசயங்களையும் ஒருவாறு விளக்க வேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது. அவன் சுமார் நாற்பது வயதடைந்த ஒரு முரட்டு மனிதன். அவன் நடுத்தரமான உயரமும், மல்லக ஜெட்டியின் உடம்பு போன்ற ஆஜாதுபாகுவான சரீரமும் உடையவன். அவனது முகத்தில் நீண்ட மீசைகளும், கேரா, கிருதாக்களும் அடர்த்தியாக நிறைந்து அவனது தோற்றத்தை மிகவும் பயங்கரமானதாக்கின. அவன் அந்த ஊரிலுள்ள மகா பிரபலமான ஒரு போக்கிரி. சிலம்பம் பழகுவது, குஸ்தி செய்வது, பாணாத்தடி விளையாடுவது, புலிவேஷம் போட்டு ஆடுவது, தண்டால், பஸ் கி ஆகிய அருமையான வேலைகள் செய்வது முதலிய தேகப் பயற்சி வித்தைகளில் அவன் நன்றாகத் தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரே காலத்தில் நூறு மனிதர்கள் சேர்ந்து அவனை எதிர்த்தாலும் அவன் அவர்களையெல்லாம் ஒரு நொடியில் வென்றுவிடக் கூடியவன். அவ்வளவு சிறப்புகளிலிருந்தும் அவனுக்கு ஒழுங்கான வருமானம் இல்லாமையால், அவன் ஒரு பாழும் மண்டபத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டு அதற்குச் சிலம்பக் கூடமென்ற பெயர் கொடுத்து, சோம்பேறிகள், அயோக்கியர்கள், குடியர்கள் முதலிய பலரைக் கூட்டி வைத்துக் கொண்டு தனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களால் கொடுக்கப்படும் சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு ஓயாமல் கஞ்சா குடித்து, அந்த போதையில் மயங்கியே இருப்பான். மூன்று நாளைக்கு ஒருதரம் அவனுக்கு அவனது மாணாக்கருள் எவனாவது ஆகாரம் கொண்டுவந்து கொடுத்தால் அவன் அதைத் தின்றுவிட்டு ஊர் சுற்றிக்கொண்டு திரிவான். அப்படி இருந்தும், அவனது தேகம் இரும்பினால் செய்யப்பட்டது போலவும், மதயானையின் பலத்தையுடையதாகவும் இருந்தது.