பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - பூர்ணசந்திரோதயம்-1 நாம் இந்த மகாராஜாவின் ராஜியத்து எல்லையைவிட்டு மைசூர் ராஜ்ஜியத்துக்குள் போய் இந்த உபத்திரவம் ஒரு மாதிரியாகத் தீருகிறவரையில் ஏதேனும் ஒர் ஊரில் இருந்துவிட்டு வந்துவிடுவோம்; நம்முடைய பெட்டி வண்டிகள் இரண்டையும் பூட்டிவைக்கும்படி உத்தரவு செய்து விட்டு வந்திருக்கிறேன். உனக்கு எந்தெந்த சாமான்கள் அவசியமாக வேண்டுமோ அவைகளை மாத்திரம் எடுத்து இரண்டு மூன்று பெட்டிகளில் வைத்துப் பூட்டிக்கொள். இங்கே இருக்கும் வேலைக்காரர்கள் நாம் திரும்பி வருகிறவரையில், வீட்டையும் மற்ற சாமான்களையும் பார்த்துக்கொள்வார்கள் என்று மிகவும் பதைப்போடு பேசினார். அவரது சொற்களைக்கேட்ட அந்த யெளவனப்பெண் மிகுந்த வியப்பும் திகைப்பும் அடைந்து, அது கனவோ நினை வோவென ஐயமுற்று, "என்ன இது நீங்கள் சொல்வது இன்ன தென்று எனக்கு விளங்கவில்லையே! அப்படி என்ன விபரீதம் நேர்ந்தது?" என்று கேட்டவண்ணம், தனது கணவரது முகத்தை உற்று நோக்கினாள். சுமார் ஐம்பது வயதடைந்தவரும், அவளுக்குத் தகப்பன் முறையிலிருக்கத் தகுந்தவருமான அவளது புருஷர் அவளை அன்பாக நோக்கி, 'பெண்ணே! என்னுடைய சிநேகிதருள் ஒருவனான கோபண்ணா ராவுக்கும் எனக்கும் விளையாட்டாக ஒரு சண்டை ஏற்பட்டது. அது வாய்ச்சண்டையிலிருந்து முற்றிக் கைச்சண்டை ஆயிற்று; அவன் என்னைக் குத்தினான். நானும் அவனைக் குத்தினேன்; என்னுடைய குத்து அவனுடைய ஈரல் குலையில் பட்டு, அதனால் அவன் ஸ்மரணை தப்பிக் கீழே விழுந்தவன் கொஞ்ச நேரத்தில் இறந்துபோய்விட்டான். அவ்வளவுதான் சங்கதி. என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாரும், உடனே புறப்பட்டு ஊரைவிட்டு ஒடிப்போகும்படி என்னை அனுப்பி விட்டார்கள்: நான் வந்துவிட்டேன். இனி நாம் இவ்விடத்தில் கொஞ்சநேரம் கூடக் காலதாமதம் செய்வது பிசகு, ஆகட்டும், சீக்கிரம் ஆகட்டும்; நீ உன்னுடைய சாமான்களையெல்லாம் எடுத்துப்