பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 மறுநாள் திங்கட்கிழமை யாதலால், கலியாணபுரம் மிட்டாதார் பூர்ணசந்திரோதயமாகிய அந்த உயிர்க் கோட்டையை முற்றுகை போடத் தொடங்கவேண்டுமென்றும், அவ்வாறே, மற்றவரும் அவரவர்களுக்குக் குறிக்கப்பட்ட தினத்தில் முயலவேண்டும் என்றும், கடைசியில் அந்தக் கோட்டையின் எஜமானி தன்னை அடைக்கலமாக ஒப்புக் கொடுத்தவுடனே, வெற்றி பெற்றவன் மற்ற ஐவருக்கும் ஒரு விருந்து அளிப்பதென்றும், அந்த விருந்தில், பந்தயத் தொகையாகிய முப்பதினாயிரமும் அவருக்குக் கொடுப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டபின், அந்த உல்லாஸ் புருஷர்கள் தத்தம் இருக்கைக்குச் சென்றனர். கலியாணபுரம் மிட்டாதார் அந்தப் பெண்மான் வேட்டைக்குப் புறப்பட அப்போதே ஆயத்தமானார். 4-வது அதிகாரம் பூர்ண சந்திரோதயம் மறுநாளாகிய திங்கட்கிழமை காலை ஒன்பது மணி சமயமாயிற்று. தஞ்சைபுரியில் தெற்கு ராஜவீதியிலிருந்த ஜெகன்மோகன விலாசத்தின் மேன்மாடத்தில் வெகு சிங்காரமாக அமைக்கப்பட்டிருந்த பல நிறங்களைக் கொண்ட பூத்தொட்டிகளினிடையில் பூர்ணசந்திரோதயம் என்ற வசீகர மான பெயர்கொண்ட பெண்ணரசி ஒய்யாரமாக நின்றும், ஒயிலாக நடந்தும், அவ்விடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பெற்ற கிளிக்கூண்டுகளிலிருந்த பச்சைக்கிளி, பஞ்சவர்ணக்கிளி, பாரசீகத்துக் கொஞ்சுங்கிளி முதலியவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றைத் தனது இடது கரத்தின் பின்புறத்தில் உட்கார வைத்துக்கொண்டு, வலக்கரத்தால் தடவிக் கொடுத்து அவற்றோடு கொஞ்சிக் குலாவிக் கிள்ளைபோல மழலைமொழி மிழற்றிக் கொண்டிருந்தாள். பூ.ச.1-5