பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை 1942 ஆம் ஆண்டில் சென்னை நக்கீரர் கழகச் சார்பில் பிரமசமாஜ மண்டபத்தில் வித்துவான் மா. இராசமாணிக்கம் பெரியபுராணத்தைப் பற்றி நான்கு நாள் பேசினர். பெரிய புராணம் ஒரு பெரிய சரித்திர நூல் என்பது அவரால் நன்கு நிறுவிக்காட்டப்பட்டது. சேக்கிழாரைச் சரித்திரக் கண்கொண்டு நோக்கச் செய்த இராசமாணிக்கத்தை மனமார வாழ்த்தினேன். போலி ஆராய்ச்சியால் தமிழுலகத்தில் இருள் சூழ்ந்து வரும் இந்நாளில் சரித்திரக் கண்கொண்டு சேக்கிழாரை நோக்கிய இராசமாணிக்கம் பாராட்டுக்குரியவர். ஆராய்ச்சி இன்றியமையாதது. ஆனால், அது நன்முறையில் நடைபெறுதல் வேண்டும். தமிழ்ப் புலவர் சிலர் ஆராய்ச்சியுலகில் நடம்புரிகின்றனர். நடம் மயிலுக்கு உரியது. அது வான்கோழிக்கு உரியதாகுமோ? ஆராய்ச்சிக்குப் பலதிறக் கண்கள் தேவை. வித்துவான் மா. இராசமாணிக்கம் ஆராய்ச்சியுலகில் இறங்கி இருள் போக்கி வருவது எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது (திரு.வி.க., வாழ்க்கைக் குறிப்புகள், 1944, ப.216) டாக்டர் மா. இராசமாணிக்கனார் பற்றியும் அவருடைய ஆய்வு பற்றியும் குறிப்பாக, பெரியபுராண ஆய்விற்கான அவருடைய கடுமையான உழைப்பைப் பற்றியுமான தமிழ் முனிவர் திரு.வி.க. அவர்களின் பாராட்டு இந்த அரிய ஆய்வின் மேன்மைகளை உணர்த்த வல்லது. தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான டாக்டர் மா. இராசமாணிக்கனார் (1907 - 1967) அவர்களின் இந்த அரிய ஆய்வுநூல் அலமு பதிப்பக வெளியீடாக வருவதில் மகிழ்ச்சி அட்ைகிறோம். இந்நூலை வெளியிடும் வாய்ப்பை அளித்த டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் குடும்பத்தினருக்கும் அச்சுப் படிகளை முழுமையாகப் படித்துத் திருத்தி உதவிய மேலைச் சிவபுரி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சி. செல்வத் தாண்டவன் அவர்களுக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் திருமகள் முனைவர் சிவஅரசி முத்துக் காளத்தி அவர்களுக்கும் நன்றி கூறுவதில் நிறைவடைகிறோம். துரை. இராமநாதன்