உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பொன் விலங்கு மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டிய நாள் நெருங்க நெருங்கப் பிறந்து வளர்ந்த ஊரையும் பழகிய மனிதர்களையும் பிரிந்து வெளியூருக்குச் செல்லப் போகிறோம் என்ற உணர்ச்சி சத்தியமூர்த்தியின் மனதில் உறைக்கத் தொடங்கியிருந்தது. தன் ஊர், தன் மனிதர்கள், தான் பழகிய சூழ்நிலை - இவற்றை நீங்கிப் புதிய ஊரில் புதிய மனிதர்களுக்கிடையே - புதிய சூழ்நிலையில் பழகப் போகிறோம் என்ற தவிப்பை எவ்வளவோ திடமாக மறந்துவிட முயன்றும் அவனால் முடியவில்லை. எண்ணி இன்னும் நான்கே நான்கு நாட்கள்தான் இருந்தன. நான்காவது நாள் இரவு இரயில் மதுரையிலிருந்து புறப்பட்டால் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தை அடைந்து பஸ் மாறி மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம். கண்காணாத தேசம் எதற்கும் போகப் போவதில்லை. அரைநாள் பயணத்தில் போய்ச் சேர்ந்து விடுகிறாற்போல் பக்கத்தில் இருக்கும் ஊர்தான். .

ஆனால், மனம் என்னவோ கண்காணாத தேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பது போலத்தான் பரிதவித்தது. எந்த ஊருக்கு இவன் புறப்பட்டுக் கொண்டிருந்தானோ அந்த ஊரை அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த ஊரின் இயற்கையழகை அவன் விரும்பினான் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், மனத்தின் பரிதவிப்பை அவனால் சிறிதும் தவிர்க்க முடியவில்லை. போகிற இடத்தைப் பற்றிய மகிழ்ச்சியும் பிரிகிற இடத்தைப் பற்றிய கனமான துயரமுமாக அவன் மனம் குழம்பியிருந்தது. ஒரு வேலையும் செய்வதற்கு ஒடவில்லை. அதே சமயத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக இருப்பதுபோல மலைப்பாகவும் இருந்தது. மூன்று அலமாரிகள் நிறைய ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் குவிந்துகிடக்கின்றன. அவற்றில் தேவையான புத்தகங்களை மட்டும் தனியே பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். புத்தகங்களை மட்டும் வைப்பதற்கே தனியாக ஒரு பெட்டி தேவைப்படும். கொஞ்சம் புதிய துணிமணிகள் வாங்கித் தைக்கக் கொடுக்க வேண்டும். மீதமிருக்கிற நாட்களில் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்துகொள்ளவே சரியாக இருக்கும்போல் இருந்தது. துடிதுடிப்பும், சுறுசுறுப்பும் நிறைந்த இளைஞர்கள் பலரோடு அவர்களுடைய அன்புக்குரிய இளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/186&oldid=595181" இலிருந்து மீள்விக்கப்பட்டது