பக்கம்:பொன் விலங்கு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 263

பார்த்துவிட்டுச் செல்வார் பூபதி. அன்றும் அப்படிச் சுற்றிப் பார்க்க வந்தவர் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமது அறையில் போய் இருந்து கொண்டு சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு அனுப்பினார். சத்தியமூர்த்தி அவரைச் சந்திக்கச் சென்றான். அவர் அவனை வழக்கத்துக்கு அதிகமான ஆவலோடும் உற்சாகத்தோடும் வரவேற்றுப் பேசினார். 'அவனுக்கு அந்த ஊர் உடல் நலத்துக்கு ஒத்துக் கொள்கிறதா கல்லூரியின் சூழ்நிலை பிடிக்கிறதா? செளகரிய அசெளகரியங்கள் எவையேனும் உண்டா? என்பதுபோல் பொதுவான அக்கறையோடு எல்லாவற்றையும் விசாரித்த பின்பு அவனே முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார் பூபதி.

"இந்தக் கல்லூரியின் ஹாஸ்டலுக்குச்சரியான வார்டன் இல்லை. ஒரு சம்பிரதாயத்துக்காக நம்முடைய வைஸ்பிரின்ஸிபாலையே வார்டனாகப் போட்டிருக்கிறோம். கல்லூரிக்காம்பவுண்டுக்குள்ளேயே மேற்குக் கோடியில் அவருக்கும் பிரின்ஸிபாலுக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறோம். வயதாகிவிட்ட காரணத்தினால் வைஸ் பிரின்ஸிபால் ஒடியாடி அலைந்து ஒன்றும் பார்க்க முடியவில்லை. அவருக்குத்துணையாக உதவலாம் என்பதோடு ஹாஸ்டலில் இன்னும் நன்றாகக் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதற்காக உங்களை உதவி வார்டனாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா? நீங்கள் இதை விரும்பாததற்குத் தவிர்க்க முடியாத காரணம் ஏதாவது இருந்தாலொழிய உங்களை நான் விட மாட்டேன். இந்த ஒரு வாரமாக 'இதற்கு யார் தகுந்த ஆள் என்று இடைவிடாமல் சிந்தித்து உங்களைத் தேர்ந்தெடுத்தேன்! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?"

இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று சத்தியமூர்த்தி சிறிதுநேரம் தயங்கினான். பெருந் தொழிலதிபராகிய அந்தத் தேர்ந்த வியாபாரி தன்னை எதற்காகவாவது பரீட்சை பார்க்கிறாரோ என்றும் நினைக்கத் தோன்றியது அவனுக்கு 'மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு நீங்கள் ஆசிரியராக வந்து பாடங்கள் கற்பிப்பது தவிர அந்தக் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து என்று தனக்கு எழுதிய கடிதத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/265&oldid=595357" இலிருந்து மீள்விக்கப்பட்டது