பக்கம்:பொன் விலங்கு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 287

குமரப்பனுடைய நம்பிக்கை. அந்தத் திடமான நம்பிக்கையோடுதான் கண்ணாயிரத்தின் வஞ்சகப் புகழ்ச்சிக்குச் செவி சாய்க்காமல் வீற்றிருந்தான் அவன். உதவியாசிரியர் மோகினியிடம் கேட்க வேண்டிய கடைசிக் கேள்வியைக் கேட்டார்.

'நீங்கள் ஆண்டாள் பாசுரங்களுக்கு அபிநயம் பிடிக்கும் போது தன்னை மறந்த தெய்வீக மலர்ச்சியோடு ஆடுகிறீர்கள் என்பதை எல்லாரும் அறிந்து ஒப்புக்கொண்டு மனமாரப் பாராட்டுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த ஆண்டாள் நடனத்தைப் பலமுறை நீங்கள் ஆடியிருந்தாலும் என்றாவது ஒரு நாள்தான் உங்கள் மனமே பரிபூரணமான திருப்தியோடு இலயித்து ஆடியிருக்க முடியும். அப்படி இலயித்து ஆடிய தினத்தைப் பற்றிய எண்ணங்களை நீங்கள் குத்துவிளக்கு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா!'

இந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் பதில் தயாராக வைத்திருந்தார்கள். 'போன வருடம் நவராத்திரியின்போது மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் ஜமீன்தார் முன்னிலையில் ஆண்டாள் நடனத்தை ஆடினாற்போல் மோகினி என்றுமே ஆடியதில்லை. ஜமீன்தாருடைய தாராள மனப்பான்மையும், இரசிகத்தன்மையும் தான் அவ்வளவு சிறப்பாக மோகினி ஆடியதற்குக் காரணம் என்று சொல்லவேண்டும்' என்று முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் முன்பே திட்டமிட்டுப் பேசி வைத்துக்கொண்டாற் போலப் பதில் கூறினார்கள். மோகினியைப் பற்றிய பேட்டியில் மஞ்சள்பட்டி ஜமீன்தாருடைய பெயர் எப்படியும் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வது குமரப்பனுக்குப் புரிந்தது. உதவியாசிரியருக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிப் புரிந்துகொள்ளாததுபோல் இருந்தார். ஜமீன்தாருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்பதற்காக அவருடைய தாராள மனப்பான்மையால்தான் மோகினியின் நடனமே சிறப்பாக அமைந்தது என்று பல்லாயிரம் பிரதிகள் செலவாகும் ஒரு பத்திரிகையில் அச்சிட்டுத் திருப்திப்பட எண்ணும் சிறுமையை நினைத்துக் குமரப்பன் மனம் குமுறினான். அவனைப்போலவே மோகினியும் மனம் குமுறியிருக்கிறாள் என்பது அப்போது அவள் கூறத் தொடங்கிய வார்த்தைகளிலிருந்து தெரியவந்தது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/289&oldid=595409" இலிருந்து மீள்விக்கப்பட்டது