உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 பொன் விலங்கு

"அவசரமாக ஊரிலிருந்து வருவதாக எனக்குத் தெரிந்தவர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார் தம்பி! நாளைக்கு மாலை விமானத்தில் அவர் டில்லி போய்விடுவார். அதனால் நான் இன்றிரவே அவரைப் பார்த்துப் பேசியாக வேண்டும். இந்த விவரத்தை அக்காவிடம் சொல்லி நீயே எனக்காக ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடு' என்று சத்தியமூர்த்தி கூறியதும் பையன் மறுக்காமல் அப்படியே செய்ய ஒப்புக் கொண்டான்.

"ஆஸ்பத்திரியில் பார்வை நேரம் முடிவதற்குள் சீக்கிரம் போக வேண்டும். தாமதமின்றிப் பக்கத்துப் பஸ் ஸ்டாப்பில் போய்ப் பஸ் ஏறிப் புறப்படு. முடிந்தால் மறுபடியும் நான் நாளைக் காலையில் வந்து பார்ப்பதாக உன் மோகினி அக்காவிடம் சொல்' என்று கூறிப் பையனை அனுப்பிய பின் பூபதியைப் பார்க்கச் செல்லலா மென்பதாக நண்பன் குமரப்பனிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி.

'நீ மட்டும் போய் வா சத்தியம்! உன்னுடைய கல்லூரி அதிபரை நீ பார்க்கச் செல்லும்போது நான் கூட வரவேண்டாம். இன்னொரு சேதி. இன்று இரவு இரயிலில் புறப்பட்டு மல்லிகைப் பந்தல் ரோடுவரை போய்த் தங்கிவிட்டு நாளைக் காலை முதல் பஸ்ஸிற்கு நான் மலைமேல் போகப் போகிறேன். உனக்கு இன்னும் நாலைந்து நாட்கள் லீவு இருப்பதால் நீ இஷ்டம்போல் புறப்பட்டு வரலாம். என் பெயரில் ஒரு கடையை வேறு அங்கே திறந்து வைத்துவிட்டு நான் இங்கே வந்து இப்படி எத்தனை நாள் உட்கார்ந்திருப்பது?" என்று அன்று மாலையே தான் மல்லிகைப்

பந்தலுக்குத் திரும்பத் திட்டமிட்டிருப்பதைத் தெரிவித்தான்

குமரப்பன். - நண்பன் கூறிய காரணம் சரியாக இருந்ததனால் சத்தியமூர்த்தி அவனைத் தன்னோடு தடுத்து நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஏழரை மணிக்கு நண்பன் இரயிலேற வேண்டும். இரயில் நிலையம்வரைஉடன்சென்று நண்பனை இரயிலேற்றி அனுப்பிவிட்டு அப்புறம் பூபதியை அவர் கொடுத்திருந்த விலாசத்தில் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணினான் சத்தியமூர்த்தி. முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் புறப்படுவதற்குச் சிறிது நேரமாயிற்று. நடந்தே இரயில் நிலையத்திற்குச் சென்றார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/436&oldid=595681" இலிருந்து மீள்விக்கப்பட்டது