பக்கம்:பொன் விலங்கு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 459

நின்று கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் பலர் நடுவே அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பதுபோல் யாரிடமோ பேசுகிற பாவனையில் அவனைத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார் கண்ணாயிரம். *

'அதுலே பாருங்க... எவ்வளவுதான் சலுகை கொடுத்துப் பெருந்தன்மையா நடத்தினாலும் இந்தத் தமிழ் வாத்தியார் பசங்க... கெட்டஅயோக்கியனுகளாயிருக்காங்க... ஒருத்தனுக்காவது தெய்வ பக்தி இருக்கிறதில்லை. நல்லெண்ணமும் கிடையாது. படிக்கிற பயல்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுகிறார்கள்' என்று சத்தியமூர்த்தியின் காதில் கேட்கிறாற் போலவே இரைந்து சொல்லியிருந்தார் கண்ணாயிரம். பூபதி அப்போது வேறு யாரோ தம்மை வழியனுப்ப வந்திருந்த நாலைந்து பேரோடு பேசிக் கொண்டிருந்தார். பூபதியை வழியனுப்ப வந்திருந்த சத்திய மூர்த்திக்குக் கண்ணாயிரத்தின் இந்த உளறலைக் கேட்டு மனம் குமுறியது. குமரப்பன் அப்போது அங்கே இருந்திருந்தால் 'ஷட் அப் மிஸ்டர் கண்ணாயிரம் யூ டோண்ட் டிஸர்வ் டு ஸ்பீக் எபெளட் ஸச் ஸேக்ரட் திங்ஸ்..." என்று கண்ணாயிரத்தின் மேல் புலியாய்ப் பாய்ந்து அவரைக்குதறியிருப்பான். எதிர்த்து வாதாடுவதற்குக்கூடத் தகுதியில்லாதவரிடம் விவாதித்துப் பயனில்லை என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி,

கண்ணாயிரமும் அவனிடம் நேருக்கு நேர் நின்று எதிர்த்துப் பேசத் தைரியமில்லாத கோழையாக யாரிடமோ பேசுகிறாற் போலத்தான் பேசித் தாக்கியிருந்தார். இந்த உலகத்தில் தெய்வ பக்தியையும் நல்லெண்ணத்தையும் கட்டிக் காப்பாற்றுவதற்குத் தாம் ஒருவரே பொறுப்பேற்றுக் கொண்டு விட்டிருப்பதுபோல் கண்ணாயிரம் பேசியது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை விடப் பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான். மனிதப் பண்பையும் சகலவிதமான ஒழுக்க நேர்மைகளையும் நம்பாமல் தெய்வத்தை மட்டும் நம்புவதாகச் சொல்லித் தற்காப்புச் செய்து கொள்கிற போலி பக்தியால் உலகத்துக்கு நியாயமான பயன் ஒன்றுமில்லை. ஆனால் கண்ணாயிரமும் ஜமீன்தாரும் இப்படிப்பட்ட போலி பக்தியினாலேயே இந்த உலகில் தங்களைப் பெரிய மனிதர்களாக நிரூபித்துக் கொள்ள முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/461&oldid=595709" இலிருந்து மீள்விக்கப்பட்டது