உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 463

பேசிக்கொண்டே நடந்த சத்தியமூர்த்தி மேற்காவணி மூலவீதி வழியாக டவுன் ஹால் ரோடுக்கு வந்து அங்கு ஒரு ஹோட்டலில் நுழைந்து வாத்தியாரும் தானுமாகக் காப்பி குடித்த பின் காற்றாட உலாவிக் கொண்டே பேசுவதற்காக இரயில்வே மேற்பாலத்துக்குச் சென்றான். வாத்தியாரும் தோடியை இராஜரத்தினம் பிள்ளை கையாண்ட லாவகத்தை வியந்தபடிக் கூறிக் கொண்டே உடன் வந்தார்.

ஒரு பக்கம் இரயில் நிலையமும் மற்றொரு பக்கம் பஸ் நிலையமுமாக நடுவே அமைந்த இந்தப் பாலத்தில் நின்று இருளும் ஒளியும் கலக்கிற சாயங்கால வேளையில் நகரத்தையும் சுற்றுப் புறங்களையும் பார்ப்பது சுவை மிகுந்ததோர் அநுபவமாயிருப்பதை சத்தியமூர்த்தி பலமுறை உணர்ந்திருக்கிறான்.

இந்த இரயில்வே மேற்பாலத்தில் நின்று மதுரையையும், நகரின் சுற்றுப்புறங்களையும் பார்க்கும் பல சமயங்களில் கல்லூரி நாட்களில் 'மைனர் போயம்"ஸில் படித்திருந்த வில்லியம் வேட்ஸ் வொர்த்தின் கவிதை ஒன்று அவனுக்கு ஞாபகம் வருவதுண்டு. அந்தக் கவிதையில் வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்திலிருந்து இலண்டன் நகரம் தெரிகிற கோலத்தை உள்ளமுருக சொல்லியிருக்கிறான். வேட்ஸ்வொர்த் அபான்வெஸ்ட் மின்ஸ்டர் பிரிட்ஜ், என்ற அந்தக் கவிதை, எர்த் ஹேஸ் நாட் எனிதிங் டு ஷோ மோர் ஃபேர் என்று கம்பீரமாகத் தொடங்கும். உலகத்தில் இதைவிட அழகான காட்சி வேறொன்று இருக்க முடியாது. இந்த இடத்தில் நின்று இங்கிருந்து தெரியும் காட்சிகளை ஆர அமர இரசிக்கத் தெரியாமல் வேகமாக நடந்து போகிறவர்கள் எவ்வளவு மந்தமானவர்களாயிருக்க வேண்டும்?' என்று வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்திலிருந்து வில்லியம் வேட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலச் சொல்லழகன் மனம் நிறைந்த மகிழ்ச்சியினால் ஆச்சரியப்பட்டுக் கூவினாற்போல் மதுரையின் இந்த இரயில்வே மேற்பாலத்தில் நின்று கொண்டு கோபுரங்களும் கட்டிடங்களும், மரங்களின் பசுமையுமாகத் தெரிகிற நகரின் மொத்தமான தோற்றத்தைப் பார்த்து, மகிழ்ந்து வியந்து கூற வேண்டுமென்று பலமுறை எண்ணியிருக்கிறான் சத்தியமூர்த்தி. இன்றோ அவனும் பாட்டு வாத்தியாரும் இந்தப் பாலத்தின் மேல் வந்து நிற்கும்போது இதன் சாயங்கால அழகையும் காட்சிகளையும் பார்க்க முடியாமல் நன்றாக இருட்டிப் போய்விட்டது. கம்பம், தேனி என்று வெளியூர்களிலிருந்து நகருக்குத் திரும்புகிற பஸ்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/465&oldid=595713" இலிருந்து மீள்விக்கப்பட்டது