உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 617

அழுகை வந்துவிடும். அதைப்போல நீயும் பச்சைக் குழந்தை மாதிரி இருக்கிறாயே அம்மா? பாட்டு நன்றாயிருக்கிறதென்றால் அதுக்குக்கூட இப்படி ஒரு அழுகையா?" என்று பாரதியின் உள்மனம் புரியாமல் மோகினி அவளைப் பேதையாக நினைத்துக்கொண்டு அந்தப் பேதைமையைப் புகழவும் தொடங்கி விட்டாள். ஆனால் உண்மையில் மோகினிதான் அப்போது அசல் பேதையாக நடந்து கொண்டிருந்தாள். அதன் பின்பு ஒவ்வொரு நாளும் இப்படி இருவருக்குமிடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மர்மமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தன. மோகினி தன் வாழ்க்கையில் பாரதிக்குச் சொல்ல இனி ஒன்றும் மீதமில்லை என்பது போல் ஒவ்வொருநாளும் அவளிடம் மனம் விட்டுப் பழகி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். பாரதியும் கண்கலங்கி அழுவதுபோல் உணர்ச்சி வசப்பட்டு அவற்றைக் கேட்பது வழக்கமாகியிருந்தது. பாரதி ஜூரமாகப் படுத்த பதின்மூன்றாவது நாளோ பதினான்காவது நாளோ, "அக்கா இன்று மாலையில் கல்லூரி விட்டதும் சத்தியமூர்த்தி சார் என்னைப் பார்த்து விசாரிப்பதற்கு இங்கே வருவதாக சொல்லியிருக்கிறாராம். நேற்று இங்கே வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினத்திடம் நான் அவருக்கு சொல்லியனுப்பினேன். அவர் இன்று இங்கே வர ஒப்புக் கொண்டிருப்பதாக அவள் சற்று முன்புதான் ஃபோனில் கூறினாள். நீங்கள் அவரைச் சந்திக்கத் தயாராயிருக்க வேண்டும்" என்று மகிழ்ச்சி மிக்க செய்தியைத் தெரிவித்தாள். இதைக்கேட்டு மோகினியின் மகிழ்ச்சியும் ஆவலும் எல்லையற்றுப் பெருகின. ஆர்வம் பொங்கும் மனத்தோடு மாலை வேளையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். ஒருநாளுமில்லாத திருநாளாக அன்று ஜமீன்தாருக்கு உடல்நிலை தேறி மாலையில் பங்களாவின் முன் வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போடச் சொல்லிச் சாய்ந்து கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி அங்கு வரப் போவதாகப் பாரதி சொல்லியிருந்த நேரம் ஆகிவிடவே அவரைப் பார்க்கும் ஆவலை அடக்க முடியாமல் வாயிற்புறமாக அவர் அங்கு வருகிறாரா என்று பார்க்க வந்த மோகினியைத் தற்செயலாக அங்கு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த ஜமீன்தார் பார்த்து விட்டார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/619&oldid=595883" இலிருந்து மீள்விக்கப்பட்டது