பக்கம்:மயில்விழி மான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

103

வாடா ஆந்திரர்கள் பழி வாங்கி விட்டார்கள். செம்மையாக வெளுத்துவிட்டார்கள்!" என்று எக்களிப்புடன் சொல்லிப் பிறகு விவரங்களையும் கூறினார்.

கந்தப்பப் பிள்ளையின் நாதஸ்வரக் கோஷ்டி பிரயாணம் செய்த அதே ரெயிலில், கல்கத்தாவில் நடந்த அதே விழாவுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடகக் கோஷ்டியாரும் சென்றார்களாம்.

பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து ஆந்திர நாட்டில் ரெயில் நிறுத்தும் படலமும் கலவரப் படலமும் நடந்தனவல்லவா? இவர்கள் சென்ற ரெயில் விஜயவாடா சேர்ந்த போது, அங்கே ரெயில்வே நிலையத்தில் அமளி துமளி சிகரத்தை அடைந்திருந்ததாம். ரெயிலில் ஒவ்வொரு வண்டிக்குள்ளும் ஆந்திர சகோதரர்கள் ஏறி, "ஆந்திர ராஜ்யமு காவல!" என்று கத்தினார்கள். யாராவது தமிழர்கள் வண்டியிலிருப்பதைப் பார்த்தால், "அரவவாடு சாவல" என்றும் சேர்த்துக் கொண்டார்கள்.

நமச்சிவாயம் முன்னமே முரடன் என்பது தெரிந்த விஷயம். அவனுடைய முரட்டுக் குணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மாறவில்லை. அவனுடைய வண்டியில் ஏறிய ஆந்திரர்கள், "ஆந்திர ராஜ்யமு காவல!" என்று கத்தியபோது, "என்னிடம் ஆந்திர ராஜ்யமு லேது. சோதரலாரா, லேதவே லேது! இல்லவே இல்லை! வேண்டுமானால் என் பெட்டியை நீவே சோதித்துப் பார்த்துக்கவல!" என்று நமச்சிவாயம் தெலுங்கும் தமிழும் கலந்து கேலியாகச் சொன்னானாம். அவன் தமிழன், கேலி