பக்கம்:மயில்விழி மான்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

107

யாவது கண்காணாத தேசத்துக்கு ஓடிப் போய்விடப் போகிறேன் என்று வற்புறுத்திச் சொன்னானாம். சொன்னதோடல்லாமல், வீட்டு வேலைக்காரப் பையனை வண்டி கொண்டுவரச் சொல்லி அதில் பெட்டி - படுக்கை முதலிய சாமான்களையும் ஏற்றி அனுப்பி விட்டானாம். அவனுடைய கைப்பெட்டியை மட்டும் நீலமணி பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றும், போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடித்தாளாம். அவன் மீறிப் போவதாயிருந்தால், அவன் கண் முன்னாலேயே உயிரை விட்டுவிடுவதாகக் கூறினாளாம். அந்த முட்டாள் எதற்காக அக்கினித் திராவகம் வாங்கி வைத்திருந்தானோ, கடவுளுக்குத்தான் தெரியும். தன் உயிரைத் தான் வாங்கிக் கொள்வதற்கோ, அல்லது நீலமணியைச் சும்மா பயமுறுத்துவதற்கோ தெரியாது. அதை நீலமணி கையில் எடுத்துக் கொண்டு நமச்சிவாயம் ஓர் அடி எடுத்து வைத்தாலும் அக்கினி திராவகத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டு விடுவேன் என்று கூறினாளாம். நமச்சிவாயம் அதை அவள் கையிலிருந்து வாங்குவதற்காக என்னவெல்லாமோ சாமர்த்தியமெல்லாம் செய்து பார்த்தான். விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்து அவளைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினான். "நல்லதாய்ப் போயிற்று; உங்கள் கையாலேயே கொன்று விடுங்கள்!" என்றாள் அவள். 'உன்னைக் கொன்று என்ன பயன்? உன்னைக் கலியாணம் செய்து கொண்ட என்னைச் சுட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லித் தன் பேரிலேயே துப்பாக்கியைத் திருப்பி சுட்டுக் கொண்டான். அந்தப்-