பக்கம்:மயில்விழி மான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மயில்விழி மான்

தெரிவிக்கிறான். அவளிடம் தான் கொண்ட அழியாத அன்பைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதி, அவளுக்கும் குழந்தைக்கும் தனது லட்சோப லட்சம் முத்தங்களை அளித்துக் கடிதத்தை முடிக்கிறான்.

கதாநாயகி ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் குழந்தையுடன் ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போகிறாள். அவள் போன பிறகு கதாநாயகன் மேற்படி கடிதத்தை அவளுடைய அறையிலிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டுத் தூக்குப் போட்டுக் கொள்வதற்காகத் தன் அறைக்கு வருகிறான். மேலே உத்திரத்தில் சுருக்குப் போட்டுக் கயிறு கட்டிவிட்டுக் கடவுளை நோக்கித் தோத்திரம் செய்கிறான். ஞாபக மறதியால் வீட்டுக் கதவு எதையும் தாழ்ப்பாளிட மறந்து விடுகிறான். இதற்குள் சிநேகிதி வீட்டுக்குச் சென்ற கதாநாயகி தன் மனம் ஏதோ பரபரப்பு அடைந்திருப்பதைக் காண்கிறாள். உடம்பு ஒரு மாதிரியாய் இருக்கிறதென்று சொல்லிவிட்டு உடனே வீடு திரும்புகிறாள். வீட்டுக்கு வந்து மேஜை மீதிருந்த கடிதத்தைப் பார்க்கிறாள். உடனே பதைபதைத்து ஓடுகிறாள். கதாநாயகன் சுருக்கை மாட்டிக் கொள்ளும் சமயத்தில், அவனைப் போய்க் கட்டிக் கொண்டு கோவென்று கதறுகிறாள்.

அந்தச் சமயத்தில் பாதிப் பாட்டும் பாதிப் பேச்சுமாகக் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் நடந்த சம்பாஷணையின் போது சபையில் கண்ணீர் விட்டுக் கதறாதவர்கள் யாரும் இல்லையென்று சொல்லலாம். "உங்களை விட எனக்கு இந்த நகை பெரிதா?" என்று