பக்கம்:மயில்விழி மான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மயில்விழி மான்

பஸிபிக் சமுத்திரத்திலுள்ள சில தீவுகள் சொர்க்கலோகத்துக்கு இணையான வனப்பும் வளமும் பொருந்தியவை என்று புத்தகங்களில் படித்திருந்தது நினைவு வந்தது. அமெரிக்காவில் நான் ஏறிய விமானம் என்னை நேரே சொர்க்கலோகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவே எண்ணிக் கொண்டேன்.

என்னுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி நானே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில் என்னுடன் விமானத்தில் வந்தவர்களைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. கப்பல்களிலும் ஆகாச விமானங்களிலும் பிரயாணம் செய்கிறவர்கள் சாதாரணமாக 'பைனாகுலர்' என்னும் தூரதரிசினிக் கண்ணாடி கொண்டு போவது வழக்கம், ஆம்; கிரிக்கெட், புட்பால், விளையாட்டுக்கள் பார்க்கப் போகிறவர்களும் 'பைனாகுலர்' கொண்டு போவதுண்டு. நான் என் தோளில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்த 'பைனாகுலர்' இத்தனை ஆபத்துகளுக்கும் தப்பிச் சேதமாகமாலிருந்தது. அதை எடுத்துக் கண்களில் வைத்துக் கொண்டு முதலில் எனக்கு எதிரே அகண்டமாக விரிந்து கிடந்த சமுத்திரத்தை நோக்கினேன்.

தெய்வமே! ஏன் பார்த்தோம் என்று கதி கலங்கும்படியான காட்சியைக் கண்டேன். நாங்கள் வந்த விமானம் கடல் நடுவில் விழுந்து கொஞ்சங் கொஞ்சமாக அமுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த பிரயாணிகள் சிலர் வெளியேறிக் கடலில் நீந்த முயற்சி செய்தார்கள். இது ஒரு கணம் தெரிந்தது. மறு கணத்தில், அம்மா! ஒரு பிரம்மாண்டமான மகரமீன் கூட்டம் பாய்ந்து வந்ததைக் கண்டேன்.