பக்கம்:மயில்விழி மான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மயில்விழி மான்

இடத்தில் அங்குமிங்கும் கையினால் அமுக்கிக் கொண்டே வந்தேன். ஓரிடத்தில் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. அங்கே பலங்கொண்ட மட்டும் அழுத்தித் தள்ளினேன். பெரிய கதவுக்குள் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிறிய கதவு, சுமார் இரண்டு அடி சதுரமுள்ள கதவு, உட்புறமாகத் திறந்து கொண்டது. அதற்கு ஒரு பலமான தாழ்ப்பாள் இருந்தது. சற்று முன் அதைத் திறந்து பார்த்த பெண் மறதியாகத் தாழிடாமல் சென்றிருக்க வேண்டும். துவாரத்தின் வழியாக உள்ளே பார்த்தபோது, ஓர் அழகிய சிறிய பட்டணம் காட்சி அளித்தது. விசாலமான வீதிகள், சாதாரண ஓட்டு வீடுகள் நடுநடுவே இரண்டொரு மாட மாளிகைகள், ஊருக்கு மத்தியில் அழகிய விஸ்தாரமான குளம், படித்துறை, ஒரு பெரிய அரசமரம், - ஊருக்கு அப்பால் பசுமையான வயல்கள், கரும்புத் தோட்டங்கள், - இவ்வளவையும் அந்தச் சிறு துவாரத்தின் வழியாக நன்றாகப் பார்க்க முடிந்தது.

வ்வளவுதான். ஒரு கணமும் யோசனை செய்யாமல் கதவின் வழியாக உள்ளே குதித்தேன். அந்தப் பெண் செய்யத் தவறிய காரியத்தை நான் செய்தேன். கதவைச் சாத்தி உட்புறத்தில் பலமாகத் தாழிட்டேன்.

மறுபடியும் சுற்றுமுற்றும் பார்த்தேன். வெளியிலிருந்து பார்த்தபோது என் பார்வையின் கோணத்தில் அகப்பட்ட ஒன்றைக் கண்டேன். எனக்கு வலது புறத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய குன்று