பக்கம்:மயில்விழி மான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மயில்விழி மான்

வரும். திருமருகல் நாதஸ்வரக்காரர் அன்றைக்கு அபாரமாகத்தான் வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய நினைவு முழுதும் அந்தச் சிறு பெண் குழந்தையின் பேரிலேயே இருந்தது. ஒவ்வொரு பந்தலுக்கும் நாதஸ்வர கோஷ்டி வந்து நின்றவுடனே, நான் அந்தக் குழந்தை வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு, அந்தக் குழந்தை முன்னால் வந்து நின்ற பிறகுதான் எனக்கு என்னுடைய வாசிப்பில் கவனம் செல்லும். அப்போது அந்தப் பெண்ணின் பரவசமான முகத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் வாசிப்பேன்.

ஊர்வலம் முடிந்து சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்ட பிறகு, நான் என் தவுல் வாத்தியத்தைச் சிஷ்யப் பிள்ளையிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையை அருகில் அழைத்து, "உன் பெயர் என்ன, குழந்தை?" என்று விசாரித்தேன். "என் பெயர் நீலமணி" என்றது அந்தக் குழந்தை. "உன் அப்பா, அம்மா யார்?" என்று கேட்டேன். "அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான் இருக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா, மாமா! அழைத்துப் போகிறேன்! அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீங்கள் வந்து பார்த்தால் ரொம்பச் சந்தோஷப்படுவாள்!" என்றது அந்தக் குழந்தை.

"ஆகட்டும் அம்மா, வருகிறேன்" என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். அப்படிப்பட்ட சங்கீத