பக்கம்:மயில்விழி மான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மயில்விழி மான்

தில் நடைபெறவில்லை. கடைசியாக, அவர் இம்மாதிரித் தொல்லைகளுக்கு இடமில்லாத மறு உலகத்துக்குப் போய்விட்டார்.

மரகதமணி தன் சின்னஞ் சிறு குழந்தையுடன் வறுமை வாழ்க்கை நடத்தி வந்தாள். எப்படியோ காலம் போய்க் கொண்டிருந்தது. மனக்கவலையினால் உடம்பிலும் நோய் வந்து விட்டது. படுத்த படுக்கையாகி விட்டாள். தாயும் பெண்ணும் இப்போது நிராதரவாக இருக்கிறார்கள்...

இந்த வேதனை தரும் வரலாற்றை அறிந்த பிறகு, "இப்போது அவர்களுக்கு ஜீவனம் எப்படித்தான் நடக்கிறது?" என்று கேட்டேன்.

"தாயாரிடம் இருந்த நகை நட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் வருகின்றன. அந்தக் குழந்தைக்கு நல்ல குரல். எங்கேயாவது பாட்டுக் கச்சேரி, நாதஸ்வரக் கச்சேரி என்றால் போய்விடும். கேட்ட பாட்டுக்களை பாடம் பண்ணிவிடும். ரெயிலிலே ஏறிப் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துத் தினம் எட்டணா பத்தணா சம்பாதித்துக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் குரல் இனிமையையும் முகக்களையையும் பார்த்து ரெயில் அதிகாரிகள் சும்மா விட்டுவிடுவார்கள். சில சமயம் இம்மாதிரி உற்சவ காலங்களில் முச்சந்திகளில் நின்று பாட்டு பாடுவதும் உண்டு. சங்கீத ரஸனையும் தாராள உள்ளமும் படைத்தவர்கள் ஓர் அணா - இரண்டு அணா கூடக் கொடுத்துவிட்டுப் போவார்கள்" என்று பதில் கிடைத்தது.