பக்கம்:மயில்விழி மான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மயில்விழி மான்

அவனுடைய நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டால் சீக்கிரத்தில் ஒருநாள் இவர்களுக்குத் திருமணம் நடந்துதான் தீரும். கலியாணத்துக்குப் பிறகும் இவளை நாடக மேடையில் ஏற்றி நடிக்கச் செய்வானா என்பது இவர்கள் இருவரையும் பொறுத்த காரியம். அவ்வளவு தூரத்துக்கு நான் இப்போது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பானேன்? தெய்வ சித்தத்தின்படி எல்லாம் நடந்துவிட்டுப் போகிறது..."

இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு, முதலில் கொஞ்ச நேரம் ஆட்சேபிப்பது போல் ஆட்சேபித்தேன். பிறகு "நீலமணி இஷ்டப்பட்டால் சரிதான்; நான் குறுக்கே நிற்கவில்லை" என்றேன். கடைசியில் என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன்.

நமச்சிவாயத்தைத் தனிமையில் அழைத்து, "விலையில்லாத பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அதைப் போற்றிப் பாதுகாப்பது உன் கடமை. அவசரப்பட்டு ஒரு தீர்மானத்துக்கும் வந்து விடாதீர்கள். கொஞ்ச நாள் நாடக மேடையோடு உங்கள் உறவு இருந்து வரட்டும். ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு இரண்டு பேரும் பரிபூரணமாக இஷ்டப்பட்டால் கலியாணம் செய்து கொள்ளுங்கள். அதுவரையில் என் வயதான தமக்கையை நீலமணியுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் தனி ஜாகையில் வசிக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்" என்றேன்.