பக்கம்:மூவரை வென்றான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

83

அவன் உடனே பதறி, “ஐயோ சாமி! இந்த ஏழையை தப்பாக நினைக்கிறீர்களா! தங்குவதற்கு இடம் தெரியாமல் சுற்றி அலைகிறீர்களே, இங்கே ஒரு சுனைக் கரையில் நான் வசிக்கும் குகை இருக்கிறது. அங்கேயே உங்களைத் தங்கச் செய்யலாம் என்பதற்காக அல்லவா, நான் உங்களோடு வருகிறேன்” என்றி கூறினான்.

“நான் தங்குவதற்கு இடம் தேடவில்லை பளிளுரே! என்னோடு வந்த சகாக்களைத் தேடுகிறேன்.”

“நல்லதாகப் போயிற்று சாமி! நீங்கள் என் குகையிலே தங்கி இருங்கள். ஒரு நொடியில் நான் உங்கள் சகாக்களைத் தேடிக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறேன். மலையிலுள்ள வழிகள் எனக்குத் கரதலப் பாடம். இந்த ஏழையின் வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்கக்கூடாது"—அந்தப் பளிஞன் வெள்ளையனின் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடினான். வெள்ளைக்கு மனம் இரங்கியது.

“சரி! நீ என்னை உன் குகையில் கொண்டுபோய் விட்டு விட்டு அவர்களைத் தேடிவா.” அவன் இணங்கினான்.

இருவரும் நடந்தனர். மரங்களடர்ந்த பகுதியில் ஒர் படிக நிற நீர்ச் சுனையின் கரையிலிருந்த குகையினருகில் வந்ததும் அவன், “சாமி! இதுதான் என் குகை! நீங்கள் இதற்குள்ளே சென்று இருங்கள்!...நான் போய் அவர்களைத் தேடி வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு நடந்தான்... வெள்ளை குகைக்குள் நுழைந்தான். அதற்குள் பளிஞனின் குரல்,

“சாமி! ஒரு சிறு உதவி! என் வில்லும் ஆயுதங்களும் குகைக்குள்ளே இருக்கின்றன. இப்போது உள்ளே போய் எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகும். நான் தேடிப் போகிற வழியில் துஷ்ட மிருகங்கள் எதிர்ப்பட்டாலும் படலாம்... தயவு செய்து உங்கள் வில்லையும் கத்தியையும் தருகிறீர்களா?” என்று கேட்டது. வெள்ளை திரும்பிப் பார்த்தான். பளிஞன் சுனைக் கரையில் நின்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/85&oldid=508114" இலிருந்து மீள்விக்கப்பட்டது