பக்கம்:மேனகா 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

111

போனதைக் கண்ட ரெங்கராஜு, சென்னையில் பெண்ணின் நிலைமையும் சரியாக இல்லையென்று யூகித்துக் கொண்டான். அவர்களது முகவாட்டத்தையும், மிதமிஞ்சிய அயர்வையுங் கண்ட நற்குணம் பெற்ற அந்தச் சேவகன், அவர்கள் போஜனம் செய்யவில்லையென்பதை கிட்டனிடம் சைகையின் மூலமாகக் காட்டினான். கிட்டன், “பாட்டீ! நீங்கள் இன்னம் பல்கூடத் தேய்க்கவில்லைபோலிருக்கிறதே. நாம் அகத்துக்குப் போய்விட்டு வருவோமே. சாயுங்காலம் வரையில் தான் நம்மை உள்ளே விடமாட்டார்களே. இங்கே நாமென்ன செய்யப்போகிறோம்” என்றான். அவர்களிருவரும் அப்போது ஆகாரத்தையும், தமது உடம்பையும், உலகத்தையும் மறந்து, தங்கம்மாள், மேனகா, வராகசாமி ஆகிய மூவரின் வடிவங்களையே மனதில் கொண்டிருந்தனர். ரெங்கராஜுவின் கேள்விக்கும், கிட்டனது பிரரேபணைக்கும் கால் நாழிகை வரையில், எவ்விதமான மறுமொழியும் கிடைக்கவில்லை. பிறகு கனகம்மாள் திடீரென்று தனது சுய உணர்வைப் பெற்று சாம்பசிவத்தை நோக்கி, “ஏனடா! உன் கையில் எவ்வளவு பணம் மிகுதி இருக்கிறது?” என்றாள். அவர்தமது பையிலிருந்த பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்து ரூபா 87-5-0 இருக்கிற தென்றார். உடனே கனகம்மாள், “சரி; இன்று நாம் ரயிலேறுவதற்குள் ரூபா முன்னூறாவது வேண்டுமே; அதற்கென்ன வழி?” என்றாள். தலையை நிமிர்த்திய சாம்பசிவம் உடனே கீழே குனிந்து யோசனை செய்தார். மூன்றாம் நாள் மாலையில் அவருடைய வீட்டில் இருந்த பணம், நகைகள், உடைகள், சாமான்கள் முதலியவற்றின் பெறுமானம் இருபதினாயிரத்திற்கு மேலிருக்கும். அவ்வளவு பொருட்களும் கொள்ளைகாரர்களால் அபகரிக்கப்பட்டுப் போயின. அவரது தகப்பனாரது காலத்திலிருந்த நிலம் வீடு முதலியவற்றை விற்று, அவற்றைக் கொண்டே அவர் கல்வி கற்றுக்கொண்டாராதலின், அவருக்குப் புராதன பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/112&oldid=1251991" இலிருந்து மீள்விக்கப்பட்டது