உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

135

வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெண்டு பிள்ளைகளுக்கும் ஆயிரம்கோடி புண்ணியம் உண்டாகும். ஈசுவரன் உங்களைக் காப்பாற்றுவார். நாங்கள் உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட மாட்டோம். நாங்கள் நன்றி கெட்டவர்களன்று, தயவு செய்யுங்கள்” என்று கூறி மன்றாடினாள். அதைக் காதில் வாங்காதவரைப்போலத் தோன்றிய துரை தொட்டிலினருகில் சென்று தங்கம்மாளது நாடி முதலியவற்றின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார். அதற்குள் அவரது வேலைக்கார னொருவன் அங்கு தோன்றி தங்கம்மாளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, காயங்களை அலம்பி மருந்து வைத்துத் திரும்பவும் கட்டினான். உடனே துரை கனகம்மாளைப் பார்த்து, “என்னவோ தெய்வச் செயலாக உயிர் இதுவரையில் நின்றிருக்கிறது. நேற்று சாயுங்காலத்துக்குள் பிராணன் போயிருக்க வேண்டும். நான் உள்ளுக்குக் கொடுத்த மருந்தின் ஆதாரத்தினால் உயிர் நின்றது. அதே மருந்தை இப்போது ஒரு முறை உள்ளே செலுத்துகிறேன். அந்த மனிதர் வந்து பத்திரம் எழுதிக் கொடுத்துப் பணமும் செலுத்துமுன் ஆபரேஷன் செய்வது என் மேல் குற்றமாகும். ஆகையால் ஒர் ஆளை அனுப்பி அவரை உடனே வரவழையுங்கள்” என்று சொல்லி விட்டு, முதல்நாள் மூக்கின் வழியாக உட்செலுத்திய மருந்தை இன்னொருமுறை உட்புறம் செலுத்தி விட்டு எழுந்து சென்றார். கதவிற் கருகில் போனவர் முகத்தைத் திருப்பி, “அலட்சியமா யிருப்பீர்களானால், இன்று சாயுங்காலத்துக்குள் உயிர் போய்விடும்; கண்டிப்பான விஷயம், விளையாட்டல்ல, ஜாக்கிரதை; நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன்; பிறகு என்மேல் குறை சொல்லக்கூடாது; என்னுடைய மருந்தினால் கூட இனிமேல் உயிர் நிற்பது சந்தேகம்” என்று சொல்லிவிட்டு வெளியிற் போய்விட்டார்.

துரையின் விஷயத்தில் கனகம்மாளுக்கு இருந்த அருவருப்பு ஒருவாறு குறைந்தது. முதல்நாள் இரக்கமற்றவராய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/136&oldid=1252018" இலிருந்து மீள்விக்கப்பட்டது