உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

மேனகா

“எவ்வளவோ சிறந்த அழகை ஈசுவரன் இவளுக்குக் கொடுத்திருந்தாலும், வாசனையில்லாத பொன் மலரைப் போலவும், பணத்திற்காக ஆசைகாட்டும் பரத்தையைப் போலவும், பெண்களுக்குரிய அச்சம், பயிர்ப்பு முதலிய குணங்களின்றி அன்னியனாகிய என்னிடம் இருக்கிறாளே! இது என்ன ஜென்மமோ” என்று அவன் பலவாறு நினைப்பதும், சோர்வடைந்து கண்ணை மூடுவதும், துயில்வதும், உணர்வடைவதும், எண்ணிறந்த நினைவுகளினால் வதை படுவதுமாய் மாறிமாறிச் செய்துகொண்டிருந்தான். அவ்வாறு அவனது மனத்திலும் தேகத்திலும் பெருத்த போர் நடந்துகொண்டிருந்தது. மேலும் இரண்டொரு நாட்கள் கழிந்தன. நன்றாகத் திரும்பிப் படுக்கவும், எழுந்திருக்கவும் இன்னம் அவனுக்கு வல்லமை உண்டாகா திருந்தது; உடம்பின் புண்களும் காற்பங்கே ஆறி யிருந்தன. அருகிலிருந்த தாதியைக் காண்பதனால் அவன் தனது குடும்பத்தின் நினைவைப் பெற்றுப் பெற்று மிகவும் தவித்த வண்ணம் படுத்திருந்தான்.

ஆனால், அந்த வெள்ளைக்காரப் பணிப் பெண்ணோ, ஒய்வு துயிலின்றி, இரவு பகலாய் அவனுக்கருகிலேயே இருந்து ஈன்ற தாயினும் சிறந்த அன்னையாய் அமைந்து, அவனுக்குரிய காரியங்களைச் செய்து கைம்மாறு கருதாத பேருதவி புரிந்து வந்தாள்; பல் தேய்த்துவிட்டுப் பால் புகட்டுவது முதல், இடையில் நழுவிப்போகும் வஸ்திரத்தை இருக்கிக் கட்டி உடம்பில் உட்கார்ந்து வதைக்கும் ஈயை ஒட்டுதல் வரையிலுள்ள ஒவ்வொரு காரியத்தையும் சலிப்பின்றி உவப்போடு செய்து வந்தாள். வராகசாமியின் அறிவு தெளிவடைய அடைய, அந்தப்பெண்மணி அவனுக்குச் செய்துவந்த பணிவிடைகளின் அருமை அவனது மனதில் படவாரம்பித்தது. பெண்பாலர் யாவரும் வஞ்சகரென்னும் நினைவு அவன் மனதில் வேரூன்றி இருந்ததாயினும், அந்த வெள்ளைக்காரியின் பணிவிடைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/153&oldid=1252168" இலிருந்து மீள்விக்கப்பட்டது