பக்கம்:மேனகா 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மேனகா

உனக்கு ஒய்வு வேண்டாமா? நீ தூங்க வேண்டாமா? பகலுக்கு ஒருத்தி இரவுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடு இங்கே கிடையாதா? எங்களைக் குணப்படுத்து முன் நீங்கள் வியாதியாய்ப் படுத்துக்கொள்வீர்கள் போலிருக்கிறதே! இப்படிப்பட்ட பெருத்த அக்கிரமம் நடக்குமோ! இப்படியும் வேலை வாங்குவார்களா!” என்று கூறிவிட்டு அவளது முகத்தை நோக்கினான். தான் கேட்ட கேள்விக்கு அவள் ஏதாகிலும் துடுக்கான விடை தருவாளோவென்று அவன் அஞ்சினான். அதைக் கேட்ட அந்த மங்கை ஒருவாறு கிலேச மடைந்தவளாய், அப்பாலிருந்த ஏதோ வஸ்துவை கவனிப்பவளைப்போல வேறு பக்கத்தைப் பார்த்துக்கொண்டு, “ஏராளமான சம்பளங்களை வாரிக் கொடுத்துவிட்டு எங்களைச் சும்மா உக்கார வைப்பார்களா? இப்படி ஆபத்துக் காலத்தில் இராப்பகலாய் உட்கார்ந்து உபசரணை செய்வதற்காகத் தானே எங்களுக்கு அதிமான சம்பளம் கொடுக்கிறார்கள். நல்ல தேகஸ்திதியிலிருப் பவர்கள் கஷ்டப்படாவிட்டால் நோயாளிகள் எப்படி பிழைப்பார்கள்? ஒருவர் கஷ்டப்பட்டால் தான் இன்னொரு வருக்குச் சுகமுண்டாகும். நாங்கள் இப்படிச் செய்து செய்து பழகியிருக்கிறோம். இது துன்பமாகவே தோன்றவில்லை. முதலில் இது எங்களுடைய கடமை; இரண்டாவது, இது பரோபகாரமான காரியம். பிறர் துன்பப்படுவதைக் கண்டு இரக்கங்கொள்ளாத மனிதர் மனிதராக இருக்கமாட்டார். மூன்றாவது, இந்தக் காரியம் பெண்களுக்கு இயற்கையானது. வீட்டில் புருஷன் குழந்தைகள் முதலியோர் வியாதிப் பட்டிருந்தால், அவர்களுடனிருந்து துன்பம் அநுபவிப்போர் ஸ்திரீகளே. ஆகையால், இது என் மனசுக்கு உகந்த வேலையாகவே இருக்கிறது; இதில் அக்கிரமம் ஒன்றுமில்லை” எனறாள்.

அவள் பேசியது மிக்க இன்பகரமாக இருந்தது. அவள் காரியத்தாலும், பேச்சாலும் புருஷரை ஒரு நொடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/155&oldid=1252170" இலிருந்து மீள்விக்கப்பட்டது