பக்கம்:மேனகா 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

163

வெள்ளைக்காரப் பெண்ணின் முகத்தில் விழிக்கவிருப்பமற்ற வனாய் அவன் சிறிதுநேரம் குன்றிப்போய்க்கிடந்தான். அவனை மீறி ஆத்திரமான சொற்கள் வாயில் தோன்றின. “இந்த முட்டாள்கள் எதற்காக இரகசியமான விஷயத்தை விளம்பரப் படுத்துகிறார்கள்? சுத்த மானங்கெட்டவர்கள்! இன்னம் யார் யாரிடம் சொல்லிவிட்டார்களோ தெரியவில்லையே! ஐயோ! இனிமேல் நான் வெளியில் போய் மனிதருடைய முகத்தில் எப்படி விழிப்பேன்! ஆ! கொலை பாதகி! சண்டாளி என்றைக்கும் தீராத அவமானத்தைக் கொணர்ந்து வைத்து விட்டாயே! அடி துஷ்ட முண்டை! பாழாய்ப்போன உன்னுடைய உடம்பு நெருப்பில் வெந்தழியாதோ? நீயேன் சாகிறாய்! இது கெட்டவர்களுக்கல்லவோ காலமாயிருக்கிறது! உலகத்தில் சாமி ஏது பூதமேது! இந்த மானக்கேட்டை உண்டாக்கின தேவடியாள் முண்டையான உன் மண்டையை ஒரே அடியில் கல்லால் உடைத்திருப்பேனே! தப்பித்துக் கொண்டாயே! கள்ளப் புருஷனோடு உல்லாசமாக வந்த உன்னை ஈசுவரன் தப்புவித்து விட்டான். சொந்தப் புருஷனாகிய நான் வண்டியில் அறைபட்டேன்” என்று பலவாறு தனக்குத்தானே பிரலாபித்து, ஆத்திரமும், அவமானமும் துக்கமும் அடைந்து கண்ணீர் விடுத்தான். அதைக் கண்ட பணிமகளும் இரக்கங்கொண்டு,துடிதுடித்து, தனது ஆசனத்தை விட்டு எழுந்து அவனுக்கருகில் சென்று, “நீங்கள் இப்படி விசனப்பட்டால், குணமடைந்த உடம்பு திரும்பவும் கெட்டுப்போய்விடும். டாக்டர் துரையும், துரைஸானியும் என்னைக் கண்டித்து வேலையிலிருந்து நீக்கிவிடுவார்கள். நான் இந்த விஷயத்தை உங்களிடம் தெரிவித்திருக்கக் கூடாது என்னுடைய தவறை மன்னித்துக் கொள்ளுங்கள்; சாமாவையர் உங்களுடைய ரகசியத்தைப் பலரிடம் சொல்லியிருப்பாரே என்று நீங்கள் சந்தேகப்பட்டு வருந்த வேண்டாம். இந்த விஷயத்தை சாமாவையர் முதலில் துரைஸானியிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/164&oldid=1252196" இலிருந்து மீள்விக்கப்பட்டது