உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

165

தெளிவாக அறிந்து கொண்டீர்களா? அல்லது அறிய முயன்றீர்களா? ஏதோ இரண்டு கடிதங்கள் அகப்பட்டன; அவைகளே முடிவான சாட்சிகள், அவைகளை வேதவாக்கியமாக வைத்துக்கொண்டு கொலை செய்யப் போய்விட்டீர்களே! உங்களுடைய கொடிய எண்ணம் நிறைவேறாதபடி ஈசுவரன் தடுத்ததிலிருந்தே இதில் எதோ சூதிருக்கிறதென்பது உங்களுக்குத் தோன்றவில்லையா? கடிதங்களை எடுத்தீர்களே! அவைகள் உண்மையான அந்த நாடகக்காரனால் எழுதப்பட்ட கடிதங்களா இல்லையா என்பதைத் தெளிவாக நிச்சயித்துக் கொண்டீர்களா? கச்சேரிகளில் எத்தனையோ கொலைக் குற்றங்கள் விசாரணைக்கு வருகின்றனவே; இம்மாதிரியான இரண்டு கடிதங்களின் ஆதாரத்தைக் கொண்டே நியாயாதிபதிகள் தண்டித்ததுண்டா? விரோதிகள் எவரேனும் பொய்யாக இந்த மாதிரி பொய்க் கடிதம் தயாரித்து வைத்திருக்கக் கூடாதா?’ என்றாள்.

எதிர்பாராத அவளது சொற்களைக் கேட்ட வராகசாமி, சிறிது மெளனம் சாதித்தான். கடிதம் பொய்க் கடிதமாக இருந்தாலும் இருக்கலாம் என்னும் எண்ணம் அவனது மனதில் தோன்றியது. ஆனால், அது உடனே மின்னலைப்போல மறைந்து போனது. “நீ சொல்வது நியாயந்தான். ஆனால், அவள்மேல் அப்படி அபாண்டமான பழி சுமத்தக்கூடியவர்கள் எங்கள் வீட்டில் ஒருவருமில்லையே! என்னுடைய சகோதரிகள் அவளிடம் மிகவும் பிரியமுள்ளவர்கள். தவிர, அவளுடைய பெட்டியில் இந்தக் கடிதங்கள் இருந்தன. திறவுகோலைத் தாலிச்சரட்டைவிட்டு நீக்காமல் அவளே வைத்திருந்தாள். பெட்டி அவள் வைத்த நிலைமையிலேயே பூட்டப்பட்டிருந்தது. அதை நானே நேரில் உடைத்துக் கடிதத்தை எடுத்தேன். இது ஒன்றையே நாம் முடிவான ருஜுவாகக் கொள்ளலாம்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/166&oldid=1252198" இலிருந்து மீள்விக்கப்பட்டது